அதிவர்ணாஸ்ரமி என்கிற வார்த்தையை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? வாருங்கள் பார்ப்போம். அதிவர்ணாஸ்ரமியே அனைத்தையும் கடந்த ஞானிகள் ஆவார்கள். ஞானி என்றாலே ஞானம் என்றுதான் பொருள். அதிலும், சாஸ்திரங்கள் இன்னும் ஆழம்போய் ஜீவன் முக்தனை அதிவர்ணாஸ்ரமி என்று எதனாலும் தொட முடியாத இடத்தில் வைக்கின்றது. அப்பேற்பட்ட ஞானிகள் ஆங்காங்கு பாரத தேசம் முழுக்க அவதரித்துள்ளனர். இனியும் அவதரிப்பர். வர்ணாஸ்ரமம் என்பது பிரம்மச்சரியம், கிரகஸ்த தர்மம், சந்நியாசம், வனப் பிரஸ்தம் என்பதே ஆகும். ஆனால், இவற்றையெல்லாம் கடந்ததே அதிவர்ணாஸ்ரமம். சர்வ சக்தியுமான சுயம் சிவமாகவே நின்ற நிலை அது. எல்லோருடைய இருதய ஸ்தானமான ஆத்மாவினுள்ளே எப்போதும் ரமிப்பவனாகவே இருக்கும் நிலை. அவனுக்கு இந்த ஜகம் எனும் உலகம் மறைந்து சகலமும் பரமாத்மாதான் என்று உயர்ந்த நிலையில் நின்றிருப்பான். தான் சரீரமல்ல, ஆத்மாதான் என்று உணர்ந்து சரீரத்தை குறித்த பிரக்ஞையற்றிருப்பான். அவனை இந்த உலகம் கட்டுப்படுத்தாது. அவன் சந்நியாச தர்மத்தையோ, இல்லறத்தையோ, பிரம்மச்சரியத்தையோ எதை ஏற்றாலும் அவன் அதனால் பாதிப்படைய மாட்டான். அதுபோன்றிருப்பவர்கள் அவதூதர்கள். எத்தனைதான் வார்த்தைகளைக் கொண்டு அவர்களின் நிலையை கூற வந்தாலும் முடியாது.
கொஞ்சம் கவனியுங்கள். இவர்கள் திக்குகளையே ஆடைகளாக தரித்திருப்பார்கள் என்பார்கள். அதாவது திசைகளையே ஆடையாக உடுத்திக் கொண்டிருப்பார்கள். அப்படியென்றால் என்னவென்று புரிகிறதா? தானே மொத்தப் பிரபஞ்சமுமாகி அடைத்து நின்றிருப்பார்கள். தானே அனைத்துமாகி நின்ற மிக உயர்ந்த நிலை அது. அப்போது அந்த திக்குகளுக்குரிய பாலகர்கள் அப்பேற்பட்டவரை பணிந்து நிற்கின்றனர். பிரபஞ்சத்தின் தாக்கத்திலிருந்தும், தான் ஒரு தேகம் என்கிற அபிமானத்தையும் விட்டவர்களையும் பார்த்து அஷ்டதிக் பாலகர்கள் பிரமித்துப் போகின்றனர். அவர்களால் ஒரு ஜீவனுக்கு ஏற்படும் அவஸ்தைகளைக் கடந்து ஒருவர் சுயம் ஆத்ம சொரூபமாகவே நின்று, தங்களையே கட்டுப்படுத்தும் உயர்ந்த நிலையை எய்தியிருக்கிற சிவத்தை அவை வணங்குகின்றன. அதனால்தான் அதிவர்ணாஸ்ரமியை, அவதூதர்களையெல்லாம் வேதங்களும், சாஸ்திரங்கள் திக்குகளையே ஆடைகளாக தரித்துக் கொண்டிருக்கிறான் என்று விளக்குகின்றன.
இந்த அஷ்டதிக் பாலகர்களே பிரபஞ்சத்தை கட்டுப்படுத்துகின்றனர். பிரபஞ்ச சிருஷ்டியின்போது இவர்கள் தங்களுக்கு உண்டான திசைகளை எடுத்துக் கொள்கின்றனர். ஜீவன்களையும், உயிர்களையும் தங்களுக்கு இடப்பட்ட பணியினூடே பாதிக்கவும் செய்கின்றனர். இவ்வளவு போதும். அப்பேற்பட்ட சிவ சொரூபமாகவே விளங்கும் அதிவர்ணாஸ்ரமி எனும் அவதூதர்களை தரிசித்திருப்பீர்கள். அவரின் நிலையை இன்னொரு ஞானியோ அல்லது உங்களின் சொந்த அனுபவத்தினாலேயோ உணர்ந்திருக்கவும் கூடும். அவர் உடல் தரித்து நடமாடினாலும் அவர் தன்னளவில் தன்னை தேகம் என்று நினைக்க மாட்டார். தன்னை விதேகியாகத்தான் உணர்வார்.
சூத சம்ஹிதை, ஸ்ரீமத் பாகவதம், மகாபாரதம் போன்ற நூல்களில் அதிவர்ணாஸ்ரமி குறித்து கூறப்பட்டுள்ளன. அதிவர்ணாஸ்ரமி எனும் வார்த்தையை ஒரு தியானச் சொல்லாக எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு ஜீவன் முற்றி முதிர்ந்த நிலை இதுவே. நம் எல்லோரின் நிலையும் கூட. அந்நிலையை அடைவதே இந்தப் பிறவியின் நோக்கம். ஆனால், மனம் இதெல்லாம் சாத்தியமா என்று கேட்டபடியே இருக்கும். அதனால் மனதிற்கு உன் எல்லை குறுகியது என்று மட்டும் சொல்லி வையுங்கள். உங்கள் வாழ்க்கை எத்தனை மேன்மையானதாகவும் இருக்கட்டும். உங்கள் மனம் எவ்வளவு கீழ்மையை நோக்கியும் கூட போகட்டும். பரவாயில்லை, ஆனால், ஞானியின் சொற்களை அவர்களின் நிலையை அவ்வப்போது எண்ணி எண்ணி மனதிற்குள் தியானியுங்கள். எல்லோருக்குள்ளும், உங்களுக்குள்ளும் மிகப்பெரிய சத்திய வஸ்து சதா ஒளிர்ந்து கொண்டிருக்கின்றது. அதை தரிசிக்க வேண்டுமென்கிற விழைவை மட்டும் கொள்ளுங்கள். ஏனெனில், நம்மாழ்வார் ஓரிடத்தில் வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே என்கிறார். வேறுவழியில்லை. நீங்கள் உங்கள் சொரூப ஞானத்தை அடைந்தே தீர வேண்டும். ஏனெனில், அதுதான் நீங்கள்.
