×

தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே!

மனநல மருத்துவர்களிடம் வரும் நோயாளிகளின் முதல் முறையீடு இதுதான்: “டாக்டர், நைட்ல தூக்கமே இல்லை டாக்டர். என்னென்னவோ சிந்தனைகள், மூளையே குழம்புது.” அதேபோல் மருத்துவர்கள் நோயாளிகளிடம் கேட்கும் முதல் கேள்வியும் தூக்கம் பற்றியதாகத்தான் இருக்கும். ஏனெனில், உடல் நலமும் மனநலமும் சரியாக இருப்பதைக் கண்டறியும் அளவுகோல் தூக்கம்தான்.இறைவன் மனிதனுக்கு அளித்துள்ள மகத்தான அருட்கொடைகளில் ஒன்று தூக்கம். இறைவல்லமைக்கு ஓர் இனிய சான்றாகவும் தூக்கத்தைக் குர்ஆன் குறிப்பிடுகிறது.

“…உங்கள் உறக்கத்தை அமைதி அளிக்கக் கூடியதாய் நாம் ஆக்கவில்லையா?”(குர்ஆன் 78:9) இந்த வசனத்தின் முன்பின் தொடர்களில் பூமியை விரிப்பாக்கி வைத்ததையும், அதில் மலைகளை ஆணிகள் போன்று நிலைபெறச் செய்ததையும், இரவு-பகலின் மாற்றங்களையும் பற்றிக் குறிப்பிடும் இறைவன், அவற்றை எல்லாம் தன் படைப்பாற்றலுக்குச் சான்றுகளாய்த் தருகின்றான். இந்தச் சான்றுப் பட்டியலில் உறக்கத்தை அமைதி அளிக்கக்கூடியதாய் ஆக்கியதையும் சேர்த்துள்ளான்.

இதிலிருந்து அமைதியான உறக்கத்திற்கு குர்ஆன் தரும் முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொள்ளலாம். தூக்கம் எனும் அருட்கொடை மட்டும் மனிதனுக்கு வழங்கப்படாமல் இருந்திருந்தால் உலகம் என்ன ஆகியிருக்கும்? மனிதர்கள் நிம்மதி இழந்து, மனச் சிதைவுக்கும், மனஇறுக்கத்திற்கும் ஆளாகி பைத்தியங்களாய்ச் சுற்றிக்கொண்டு இருந்திருப்பார்கள். ‘பைத்தியக்கார உலகம்’ என்பது உண்மையாகி இருக்கும். ஆனால், தான் படைத்த மனித இனத்தின்மீது பேரன்பும் பெருங் கருணையும் கொண்ட இறைவன் அவர்களுக்குத் தூக்கத்தின் மூலம் நிம்மதி அருளினான்.

நபிகளாரின் காலத்தில் உஹத் எனும் இடத்தில் நம்பிக்கையாளர்களுக்கும் நிராகரிப்பாளர்களுக்கும் இடையில் போர் மூண்டது. தொடக்கத்தில் நம்பிக்கையாளர்கள் பதற்றத்திலும் கவலையிலும் இருந்தனர். இறைவன் அவர்கள்மீது கருணை புரிந்தான். அவர்களின் பதற்றத்தையும் துன்பத்தையும் போக்கும் வகையில் அவர்களைக் கொஞ்சம் உறங்க வைத்தான்.

குர்ஆன் கூறுகிறது: “…இந்தத் துன்பத்திற்குப் பிறகு மன ஆறுதலை அளிக்கக்கூடிய சிற்றுறக்கத்தை இறைவன் உங்களுக்கு அருளினான். உங்களில் ஒரு குழுவினரை அது ஆட்கொண்டது.” (குர்ஆன் 3:154) மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டிய இடம்தான் போர்க்களம். ஆயினும் பதற்றப்படாமல் நிதானமாகவும் தெளிவாகவும் செயல்பட வேண்டியது போர்வீரனின் கடமை. அப்போதுதான் வெற்றி காண முடியும். தூக்கம் உடல்நலத்திற்கு நல்லது என்று எப்போது பார்த்தாலும் தூங்கிக் கொண்டே இருப்பதும் சரியல்ல. அளவோடு உறங்கி, நலமோடு உழைத்து, வளமோடு வாழ்வோமாக.
– சிராஜுல் ஹஸன்

Tags :
× RELATED சதுர்த்தி விரதம் வேறு, சங்கடஹர சதுர்த்தி விரதம் வேறா?