ஊட்டி : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தினர் ஊட்டியில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அனைத்து தொகுப்பூதிய செவிலியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு மீதான மேல்முறையீட்டை கைவிட்டு செவிலியர்களுக்கு சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். செவிலியர் கண்காணிப்பாளர் நிலை 3 பணியிடங்களை மீண்டும் உருவாக்க வேண்டும்.
கொரோனா காலக்கட்டத்தில் பணி செய்து பணி நீக்கம் செய்யப்பட்ட அனைத்து செவிலியர்களுக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும். பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு முடித்த செவிலியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும். அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளிலும் செவிலியர் கல்லூரிகள் உருவாக்க வேண்டும். எம்ஆர்பி. தொகுப்பூதிய செவிலியர்களுக்கு ஊதியத்துடன் மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும்.
கருவூலம் மூலம் ஊதியம் பெறும் தொகுப்பூதிய செவிலியர்களுக்கு ரூ.18 ஆயிரம் ஊதியம் நிலுவை தொகையுடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நீலகிரி மாவட்ட தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் ஊட்டியில் உள்ள நீலகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 5வது நாள் காத்திருப்பு போராட்டம் நடந்தது.
சங்க மாநில துணை தலைவர் நல்கிஸ் பேகம் தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க துணை தலைவர் ராஜேந்திரன் சிறப்புரையாற்றினார். மாவட்ட செயலாளர் பிரீத்தி, மாநில செயற்குழு உறுப்பினர் ரம்யா ஆகியோர் கோரிக்கை விளக்கவுரையாற்றினர். இதில் ஏராளமான செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
