×

நன்னிலம், மயிலாடுதுறை, பூம்புகார் தொகுதி நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒன் டூ ஒன் சந்திப்பு: வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு தொடர்பாக அறிவுரை வழங்கினார்

 

சென்னை: நன்னிலம், மயிலாடுதுறை, பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திமுக நிர்வாகிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து பேசினார். தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. சட்டப்பேரவை தேர்தலை எதிர்க்கொள்ள ஆளுங்கட்சியான திமுக முழுவீச்சில் தயாராகி வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் உள்ள திமுக நிர்வாகிகளை சந்திக்க திமுக தலைவர், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்தார். அதன்படி முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘உடன் பிறப்பே வா’ என்ற தலைப்பில் ‘ஒன் டூ ஒன்’ மூலம் தொகுதி வாரியாக நிர்வாகிகளை கடந்த ஜூன் 13ம் தேதி முதல் நேரில் சந்தித்து பேசி வருகிறார். இதுவரை அவர் 50 நாட்களில் 115 சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகளை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.

இந்த நிலையில் திமுக தலைவர் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை நன்னிலம், மயிலாடுதுறை, பூம்புகார் ஆகிய சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகளை தனித்தனியே சந்தித்து பேசினார். சந்திப்பின் தொகுதி நிலவரம் குறித்து கேட்டறிந்தார். சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் குறுகிய மாதங்களே உள்ளதால் ேதர்தல் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.

தமிழக அரசின் மக்கள் நலன்சார்ந்த திட்டங்களை வீடுகள் தோறும் சென்று விளக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும் தமிழ்நாட்டின் 15 சதவீத வாக்காளர்களை, அதாவது 97 லட்சம் வாக்காளர்களை நீக்கி, வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளார்கள். நீக்கப்பட்ட 97 லட்சம் வாக்காளர்களில் நம் வாக்காளர்கள் இருக்கிறார்களா என கவனமாக பார்க்க வேண்டும்.

ஒரே ஒருத்தர் தவறுதலாக விடுபட்டு இருந்தால் கூட பார்ம்-6 நிரப்பிக் கொடுத்து வாக்காளர் பட்டியலில் இணைக்க வேண்டும். அடுத்ததாக புதிய வாக்காளர்கள் இணைக்கப்படுவதையும் தொடர்ந்து கவனிக்க வேண்டும். போலிகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நம்மை நேர்மையாக-நேர்வழியில் வீழ்த்த முடியாத பாசிச சக்திகளும்-எதிரிகளும், குறுக்கு வழியில் காரியம் சாதிக்க நினைப்பார்கள்.

அதற்கு நாம் கடுகளவுகூட இடம் தரக்கூடாது. நம் கவனத்தை திசை திருப்பவும்-நம்மோட உழைப்பை வீணாக்கவும் எதிரிகள் கூட்டமும், வீணர்கள் கூட்டமும் முயற்சி செய்வார்கள். அதையெல்லாம் புறந்தள்ளி, தேர்தல் பணி ஆற்றுங்கள். நம் கூட்டணி தான் வெற்றிக் கூட்டணி. வெற்றியை எட்டும் வரைக்கும் கவனம் சிதறாமல் உழைக்க வேண்டும் என்று அப்போது வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

Tags : Nannilam ,Mayiladuthura ,Bombukar Constituency Administrators ,Mu. K. Stalin ,Chennai ,Chief Executive Officer ,Bombugarh Assembly Constituency ,Chief Minister ,K. Stalin ,Tamil Nadu Legislative Assembly ,Dima Puwich ,
× RELATED முல்லை பெரியாறு அணையில் ரிமோட்...