×

சதுர்த்தி விரதம் வேறு, சங்கடஹர சதுர்த்தி விரதம் வேறா?

?வாஸ்து பூஜை செய்யும் நேரம் மரண யோகமாக இருந்தால் செய்யலாமா? மரண யோகம், கரிநாள் எமகண்டம் போன்ற காலங்களின் சுப காரியங்களை செய்யக்கூடாது என்கிறார்களே?
– வெங்கடேஸ்வரன், சுவாமிமலை.

சுபகாரியங்கள் வேறு. வாஸ்து காரியங்கள் வேறு. ஒவ்வொரு விதிக்கும் விதிவிலக்குகள் உண்டு வாஸ்து பூஜை என்பது வீடு கட்டுவதற்கும் கடைக்கால் போடுவது, நிலை வைப்பது போன்ற செயல்களைச் செய்வதற்குமான காலம். அந்தக் காலம் மரண யோகமாக இருந்தாலும், கரி நாளாக இருந்தாலும் ராகு காலமாக இருந்தாலும் செய்யலாம். தடையில்லை வாஸ்து நேரத்துக்கு நட்சத்திர தோஷம், திதி தோஷம் போன்ற எந்த தோஷமும் இல்லை.

வாஸ்து நேரம் பார்த்து விட்டால் மற்ற விஷயங்களைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. அது கிரக ஆரம்பம் செய்வதற்கு மட்டுமே உரியது என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள் அந்த நேரத்தில் வேறு சுபகாரியங்களைச் செய்யக் கூடாது.

? சோம ச்ரவணம் ஏன் விசேஷமானது?
– ராஜலட்சுமி, பழனி.

பொதுவாக திருவோண நட்சத்திரம் சிறந்த நட்சத்திரம் திருவோண நட்சத்திரத்தைத்தான் ச்ரவண நட்சத்திரம் என்று சொல்வார்கள். திருவேங்கடமுடையான் அவதார நட்சத்திரம் திருவோணம். திருவோணத்தில் விரதம் இருப்பதன் மூலமாக அளப்பரிய நன்மைகளைப் பெறலாம். இந்த விரதத்திற்கு திருவோண விரதம் என்று பெயர். திருவோணம் சந்திரனுடைய நட்சத்திரம். திங்கட்கிழமை சந்திரனுடைய நாள்.

சந்திரனுடைய நாளாகிய திங்கட்கிழமையில் சந்திரனுடைய நட்சத்திரமான திருவோணம் அமைந்தால் அது மிகப்பெரிய சிறப்பு. அந்த நாளை சோம ச்ரவண நாள் என்று அழைப்பார்கள். சோமன் என்றால் சந்திரனுக்குப் பெயர். இந்த நாளில் பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபடலாம். சோம சுந்தரன் என்று சிவபெருமானை அழைப்பதால் சோம ச்ரவண நாளில் சிவன் கோயிலுக்குச் சென்று வணங்குவதும் பெரும் புண்ணியத்தைத் தரும்.

?தசமகா வித்யா என்பது என்ன?
– வனஜா, மதுரை.

ஸியாமா ரகசிய மந்திரம் என்று ஒன்று உண்டு. அதில் பராசக்தி பத்து விதமான வடிவங்களில் காட்சி தருவதாக வருகிறது. பத்ரகாளி, தாரா, மஹா ஷோடசி என்னும் திரிபுர சுந்தரி, புவனேஸ்வரி, திரிபுர பைரவி, சின்னமஸ்தா, தூமாவதி, மாதங்கி, கமலா ,பகளாமுகி என 10 வடிவங்களைச் சொல்லுகின்றார்கள்.

காளீ தாரா வித்யா ஷோடசீ புவனேச்வரீ
பைரவீச் சின்னமஸ்தா ச வித்யா தூமாவதீ ததா
மாதங்கீ ஸித்தவித்யா ச கவிதா பகளாமுகி
ஏதா தச மஹாவித்யா ஸர்வ தந்த்ரேஷு கோபிதா:
(ச்யாமா ரகஸ்யம்)
– என்று இந்த தசமகா வித்தைகளையும், தசமஹா வித்யா நாம மந்திரத்தோடு தினசரி வழிபாடு செய்ய, நவகிரக தோஷங்கள் விலகி நல்வாழ்க்கை கிடைக்கும்.

?எந்த நாள்களில் நரசிம்மருக்கு பூஜை செய்வது உகந்தது?
– ரங்கனாதன், ராமேஸ்வரம்.

நாளை என்பது நரசிம்மரிடத்தில் இல்லை. இன்று இப்பொழுதே என்பதுதான் அவருடைய குணம். எனவே எல்லா நேரங்களிலும் நரசிம்ம பூஜை செய்யலாம். என்றாலும் வளர்பிறை சதுர்த்தசி திதியிலும் சுவாதி நட்சத்திர தினங்களிலும் நரசிம்ம மூர்த்தியை வழிபடுவது மிகச்சிறந்த பலன்களைத் தரும். தினசரி பிரதோஷ காலமாகிய மாலை நேரத்திலே வணங்குவதும் நரசிம்மருடைய பேரருளை எளிதாகப் பெற்றுத் தரும்.

?பிறப்பில்லாத இறைவனுக்கு எப்படி ஜெயந்தி உற்சவங்களைக் கொண்டாடுகிறார்கள்?
– கவிதா சேஷாசலம், திண்டிவனம்.

பிறப்பில்லாத இறைவன் என்பது சரிதான். ஆனால், வேதம் அஜாயமானோ பஹுதா விஜாயதே என்று பிறப்பில்லாத அவன் பலபடியாக பிறக்கிறான் என்றும் சொல்கிறது. அவன் சில நேரங்களிலே நம்மைப் போன்ற உயிர்களைக் காக்கும் பொருட்டு, உயர்ந்த நிலையிலிருந்து கீழே இறங்கி வருகிறான். அப்படி இறங்கி வருவதை அவதாரம் என்பார்கள். இந்த அவதாரம் என்றைக்கு எந்த நட்சத்திரத்தில் நிகழ்ந்ததோ அந்த நட்சத்திர தினங்களைத்தான் அவதார தினங்களாக நாம் கொண்டாடுகிறோம்.

திருக்கோயிலில் தல புராணங்களிலே அந்தந்த இறைமூர்த்தங்கள் ரிஷிகளுக்கோ மற்றவர்களுக்கோ தோன்றி வரம் கொடுத்த நாளை அந்தந்த திருக்கோயிலின் மூர்த்திகளின் அவதார தினமாகக் கொண்டாடுவார்கள். உதாரணமாக ஆண்டாள் அவதரித்தது ஆடிப் பூரம். திருமலையப்பனுக்கு புரட்டாசி திருவோணத்தையும், தில்லை கோவிந்தராஜப் பெருமாளுக்கு உத்தர நட்சத்திரத்தையும் அவதார தினமாகக் கொண்டாடுவார்கள்.

?பௌர்ணமி அன்று எப்படி விரதம் இருக்க வேண்டும்?
– ஜானகிராமன், அம்பத்தூர்.

முழு நிறைவு நாளாகிய பௌர்ணமி மனம் தெளிவாக இருக்கவும், முடிவுகளை தெளிவாக எடுக்கவும் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு முன்னேறவும் தேவையான சிந்தனையைச் பெறவும் சந்திரனை வணங்கும் நாள் அந்த நாளிலே நிலவொளியிலே மலை வலம் வருவது சாலச் சிறந்தது. கிரிவலம் என்று சொல்வார்கள். மலை இல்லாத ஊர் கோயிலிலே, கோயில்களின் பிரகாரத்தை வலம் வரலாம். நிலவொளி படுகின்ற தரையிலே வலம் வருவது சாலச் சிறந்தது. அன்றைய தினம் விரதமிருந்து சத்யநாராயண பூஜை செய்யலாம். மிகவும் சக்தி வாய்ந்த இந்த பூஜையைச் செய்து வருபவர்களுக்கு நினைப்பதெல்லாம் நடைபெறும்.

?மரங்களிலே அரச மரத்துக்கு மட்டும் என்ன பெருமை?
– ஹரிஹரசுப்ரமணியம், காரைக்குடி.

அரசமரம் என்று நீங்களே சொல்லி விட்டீர்கள். மரங்களிலே அது ராஜா. அதனால் அது வழிபாட்டுக்கு உரியதாக இருக்கிறது. “மூலதோ பிரம்ம ரூபாய மத்யதோ விஷ்ணு ரூபிணே அக்ரத: சிவ ரூபாய விருட்ச ராஜா யதே நம:” என்ற மந்திரத்தால் அரசமரம் பிரம்ம ரூபமாகவும் விஷ்ணு ரூபமாகவும் சிவரூபமாகவும் விளங்குகின்றது, விருட்சம். “மரங்களிலே நான் அரச மரமாக இருக்கிறேன்” என்கிறான் கண்ணன் கீதையில். அரச மரத்தை வலம் வருவதன் மூலமாக யோகமும் ஐஸ்வர்ய லாபமும் ஏற்படும். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்களுக்கு மிகச்சிறந்த நன்மை கிடைக்கும். அதிலும் சோம அமா என்று சொல்லப்படும் திங்கட் கிழமையும், அமாவாசையும் கலந்த நாளில் அரசமரம் வழிபாடு சாலச் சிறந்த பலன்களைத் தரும் என்று சாஸ்திரம் சொல்லுகின்றது.

?சதுர்த்தி விரதம் வேறு, சங்கடஹர சதுர்த்தி விரதம் வேறா?
– வேலாயுதம், கடலூர்.

இரண்டும் விநாயகருக்கு உரியதுதான். ஒவ்வொரு மாதமும் வளர்பிறையில் ஒரு சதுர்த்தியும் தேய்பிறையில் ஒரு சதுர்த்தியும் வரும். இதில் தேய்பிறை சதுர்த்தியை சங்கடஹர சதுர்த்தி (சங்கடங்களை போக்கும் சதுர்த்தி) என்று சொல்வார்கள். இரண்டு சதுர்த்திகளும் விநாயகர் விரத வழிபாட்டுக்கு உரியது. செவ்வாய்க் கிழமையில் வரும் சங்கடஹர சதுர்த்தி மிகவும் முக்கியமானது. இது அங்காரக சதுர்த்தி என்றும் அழைக்கப்படுகிறது. ஆவணி மாதத்தில் வரும் மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தியைத்தான் விநாயகர் சதுர்த்தி தினமாகக் கொண்டாடுகிறோம்.

?நம்முடைய உடம்பை ஆலயம் என்று சொல்வது ஏற்கக் கூடியதுதானா?
– இந்துமதி, திருவானைக்காவல்.

திருமூலர் அப்படித்தான் சொல்லுகின்றார். நாமும் அப்படித்தான் நினைக்க வேண்டும். நம்முடைய உடம்பு என்று நினைக்காமல், இறைவன் வசிக்கின்ற கோயில் என்று நினைத்துக் கொண்டு நம்முடைய கடமைகளைச் செய்ய வேண்டும். உதாரணமாக நீராடுகிறோம் என்று சொன்னால் நம்முடைய உள்ளத்திலே உள்ள இறைவனையும் சேர்த்து நீராட்டுகிறோம் என்று பொருள். நாம் உணவை உண்கிறோம் என்று சொன்னால் நம்முடைய இதயத்தில் வசிக்கக்கூடிய எம்பெருமானுக்கு பிரசாதத்தைச் சமர்ப்பிக்கிறோம் என்று பொருள். மனதில் கை வைக்கிறோம் என்று சொன்னால் நெஞ்சிலே இருக்கக்கூடிய இறைவனை நாம் வணங்குகின்றோம் என்று பொருள். இதைத்தான் திருமூலர் இந்தப் பாடலிலே சொல்லுகின்றார்.

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே’

?முன் ஜென்மத்தை ஜாதகம் மூலம் தெரிந்து கொள்ள முடியுமா?
– கணேசன், காட்டுமன்னார்கோவில்.

இதுவரை எடுத்த ஜென்மத்திற்கு அளவே கிடையாது. அருணகிரிநாதர் சொல்வது போல எழுகடல் மணலையும் ஒரு இடத்தில் கொட்டி அளந்தாலும் நாம் எடுத்த ஜென்மத்தின் கணக்கை அளவிட முடியாது. அப்படி இருக்கும்பொழுது முன் ஜென்மத்தைப் பற்றி தெரிந்து கொள்வதில் என்ன இருக்கிறது? அதுமட்டுமல்ல. அப்படி தெரிந்து கொள்வது கூட ஒரு விதத்தில் தவறு. காரணம் அது தேவரகசியம். நாம் கருவில் உற்பத்தியாகும் பொழுது நம்முடைய பழைய நினைவுகள் எல்லாம் அழிக்கப்பட்டுத்தான் பிறக்கிறோம். அதனால் ஜாதக கட்டங்களை வைத்துக்கொண்டு இவற்றை எல்லாம் தெரிந்து கொள்ள முடியும் என்று நினைப்பது சரியல்ல.

அப்படியே சொன்னாலும், யார் போய் அதை சரி என்று தீர்மானிக்க முடியும்? ஆனால், ஒரு விஷயம். இப்பொழுது எந்த மாதிரியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை வைத்துக்கொண்டு முன் பிறவியில் என்ன மாதிரி இருந்தோம் என்பதை விட, எத்தகைய வினைகளை ஆற்றி இருக்கிறோம் என்பதை யூகிக்க முடியும். அதைத்தான் துன்பப்படுபவர்கள் “நான் முன் பிறவியில் என்ன பாவம் செய்தேனோ” என்று புலம்புகிறார்கள்.

வாழ்க்கையை நன்றாக அனுபவிப்பவர்கள், “ முன் ஜென்ம புண்ணியம், நன்றாக இருக்கிறேன்” என்கிறார்கள். அதோடு இந்த விஷயத்தை விட்டுவிட வேண்டியதுதான். இப்பொழுது உள்ள ஜென்மத்தை முறையாக வாழ்ந்து, இனி ஒரு ஜென்மம் வராத நிலையை அடைவதுதான் வாழ்வின் குறிக்கோள். இதற்கு முன் ஜென்ம கர்மா நம்மை எவ்விதத்திலும் பாதிக்காது. அதனால் அதைத் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

? மார்கழியில் திருப்பாவை பாடுவதால் சிறப்பு உண்டா?
– செல்வகுமார், தேனி.என்ன அப்படி கேட்டு விட்டீர்கள்?

மார்கழி மாதம் என்றாலே திருப்பாவை தானே! சைவர்களுக்கு திருவெம்பாவையும், திருப்பள்ளி எழுச்சியும் தானே. வைணவத்தில் மார்கழி மாதம் என்று கூடச் சொல்வது கிடையாது. திருப்பாவை மாதம் என்றுதான் சொல்வார்கள். காரணம் திருப்பாவை என்கிற தமிழ் பிரபந்தம் மார்கழி திங்கள் என்று மார்கழி மாதத்தின் பெயரோடுதான் துவங்குகிறது. கண்ணன் குழல் ஓசையில் வல்லவன். அவன் ஆடு மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான்.

அவனுடைய இசையைக் கேட்டு உலகத்தில் உள்ள அத்தனை உயிர்களும் அவனையே நோக்கி, அவன் இசையில் உருகி நின்றன. அப்பொழுது ஆண்டாளின் திருப்பாவை இசையைக் கேட்டு அடுத்த நிமிடம் கண்ணன் தன்னுடைய குழலை கீழே வைத்துவிட்டு, ஆடு மாடுகளை திருப்பிக் கொண்டு திருப்பாவை வந்த திசையை நோக்கித் திரும்பினான் என்று சுவையாகச் சொல்வார்கள். இதைவிட வேறு என்ன ஏற்றம் திருப்பாவைக்குச் சொல்ல முடியும்?.

தேஜஸ்வி

Tags : Venkateswaran ,Swamimalai ,
× RELATED அனைத்தையும் கடந்த ஞானிகள்!