×

கூட்டணிக்கு எந்த கட்சி வந்தாலும் ஏற்போம்: தவெகவுக்கு எடப்பாடி மீண்டும் அழைப்பு

இடைப்பாடி: சட்டமன்ற தேர்தலில், ஒத்த கருத்துடைய எந்த கட்சி வந்தாலும் கூட்டணியில் ஏற்றுக் கொள்வோம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்டம் இடைப்பாடியில் உள்ள பயணியர் மாளிகையில், நேற்று அளித்த பேட்டி: ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அனைத்து மக்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. நாங்கள் குடும்ப அட்டைக்கு ரூ.2500 வழங்கினோம்.

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு அரசு ரூ.5000 வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். ஒன்றிய அரசு 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை, 125 நாளாக உயர்த்தி இருக்கிறது. அந்த திட்டத்திற்கு காந்தி பெயரே தொடர வேண்டுமென, நாங்கள் ஒன்றிய அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கிறோம். இந்த திட்டத்திற்கு 40 சதவீத நிதியை மாநில அரசு வழங்க வேண்டும் என கூறியிருக்கிறார்கள். இதுகுறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றத்தில் பேசி, வாதாட வேண்டும். நாடாளுமன்றத்தில் பிரச்னை எழுப்ப வேண்டும்.

எரிபொருள் விலை உயர்வு, உதவி பொருட்கள் விலை உயர்வு, சம்பள உயர்வு இவற்றையெல்லாம் கணக்கிட்டு தான், அவ்வப்போது ரயில் கட்டணத்தை உயர்த்துவார்கள். ஒரு கிலோமீட்டருக்கு இரண்டு பைசா உயர்த்தியிருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள். இதை ஒன்றிய அரசு குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். அதிமுகவை பொறுத்தவரை விரைவில் தேர்தல் அறிக்கை தயார் செய்து வெளியிடுவோம். தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகள் முழுமையாக மேற்கொள்ளப்பட்டதால், போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டிருக்கிறார்கள். உண்மையான வாக்காளர்கள் விடுபட்டு இருந்தால், மீண்டும் பெயர் சேர்க்க வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. எஸ்ஐஆர் பணியில் எந்த குறைபாடும் இல்லை. இது அனைத்து கட்சிக்கும் பொதுவானது. இவ்வாறு கூறினார்.

தவெக விருப்பப்பட்டால் பாஜ கூட்டணியில் வந்து சேர்ந்து கொள்ளலாம் என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியிருக்கிறாரே என நிருபர்கள் கேட்டதற்கு, அது பாஜவின் கருத்து. இந்த அரசை அகற்ற, ஒத்த கருத்து உடைய எந்த கட்சி வந்தாலும் எங்கள் கூட்டணியில் ஏற்போம் என்றார். தவெக தலைவர் விஜய், தூய சக்தி என கூறி இருக்கிறாரே என்ற கேள்விக்கு, அவரது கட்சி தீய சக்தியா? தூய்மை சக்தியா? என மக்கள் தான் முடிவு செய்வார்கள் என்று எங்களது துணை பொதுச்செயலாளர் தெளிவாக தெரிவித்து இருக்கிறார் என்றார்.

* 3 புடவைக்கு ஒன்னு இலவசம்… கூவி கூவி அழைக்கும் எடப்பாடி: கூட்டணி குறித்து டிடிவி.தினகரன் கிண்டல்
காரைக்குடி: மூன்று புடவை வாங்கினால் ஒரு புடவை இலவசம் என்பது போல கூட்டணிக்கு கட்சிகளை அழைக்கிறார் எடப்பாடி என டிடிவி.தினகரன் தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் நேற்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தரிசனம் செய்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: அமமுகவை தவிர்த்து விட்டு எந்த கூட்டணியும் ஆட்சி அமைக்க முடியாத அரசியல் சூழ்நிலைதான் தற்போது உள்ளது. அமமுகவை தவிர்த்து விட்டு தமிழ்நாட்டு அரசியல் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். கடந்த தேர்தலில் ஆட்சிக்கு யார் வரவேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக இருந்தோம். இந்த தேர்தலில் நாங்கள் சேர்கின்ற அணி தான் உறுதியாக ஆட்சி அமைக்கும்.

தமிழ்நாட்டில் கூட்டணிக்கு தலைமை தாங்குகின்ற கட்சிகள் எங்களிடம் பேசி வருகின்றனர். நாங்கள் உறுதியாக கூட்டணியுடன் தான் போட்டியிடப் போகிறோம். எந்த கூட்டணிக்கு செல்வோம் என்பதை பின்னர் தெரிவிப்போம். எடப்பாடி எங்கள் கூட்டணிக்கு யார் வேண்டுமானாலும் வாருங்கள் என்று கூறுவது எப்படியிருக்கிறது தெரியுமா? தீபாவளி, பொங்கல் நேரத்தில் துணிக்கடைகளில் மூன்று புடவை வாங்கினால் ஒரு புடவை இலவசம் என வியாபார யுக்திக்காக அறிவிப்பார்கள். அதுபோல அரசியலில் வெற்றி பெற வேண்டும் என்ற யுக்திக்காக ஒவ்வொரு கட்சியும் ஒன்றை கூறுவார்கள். அதுபோல கூறுகிறார் எடப்பாடி பழனிசாமி. இவ்வாறு கூறினார்.

* தேஜ கூட்டணியில் 7 சீட்டா?
பேட்டியின்போது, ‘‘தேஜ கூட்டணியில் உங்களுக்கு 7 சீட் ஒதுக்கியுள்ளதாகவும், அண்ணாமலை பேச்சுவார்த்தை நடத்துகிறார் என்றும் தகவல் பரவி வருகிறதே’’ என நிருபர்கள் கேட்டதற்கு டிடிவி.தினகரன், ‘‘எம்பி தேர்தலின் போதே எனக்கு 6 முதல் 7 சீட் தருவதாக கூறினர். இதை அண்ணாமலையிடம் கேட்டாலே தெரியும். நான் தான் வேண்டாம் என கூறினேன். நாங்கள் போட்டியிட்டால் தான் அமமுக வாக்கு வங்கி பலன் அளிக்கும் என்பதற்காக 2 தொகுதிகளில் நின்றோம். இதுபோன்ற வதந்திகளை கேட்கும் போது நமது பகுதிகளில் கூறுவது போல், ‘‘அடியே என்று கூப்பிட ஆத்துகாரியே அமையவில்லை. பிள்ளைக்கு பேர் வைத்துக் கொண்டு அலைகிறான்’’ கிருஷ்ணமூர்த்தி என கூறுவார்கள். அதுபோல அமமுக குறித்து வதந்தியை விதைக்கின்ற கிருஷ்ணமூர்த்தி யார் என்பது எனக்கு தெரியும். அந்த கிருஷ்ணமூர்த்தியின் சீடர்கள் யார் என்பதும் எனக்கு தெரியும். அவர்கள் எல்லாம் ஏமாந்து போவது உறுதி. எங்களை தமிழ்நாட்டில் இன்று இருக்கும் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் கட்சிகள் அணுகி பேசி வருகின்றனர். அமமுக சார்பில் எந்த முடிவும் எடுக்கவில்லை. வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். இவ்வாறு கூறினார்.

Tags : Edappadi ,Thaveka ,AIADMK ,General Secretary ,Edappadi Palaniswami ,Tourist House ,Edappadi, Salem district ,
× RELATED நிர்வாகிகளுடன் எடப்பாடி ஆலோசனை