திருவெண்ணெய்நல்லூர், டிச. 23: திருவெண்ணெய்நல்லூர் அருகே மினி லாரியில் ரேஷன் அரிசி கடத்திய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே சேமங்கலம் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில், காவல் உதவி ஆய்வாளர் அன்பழகன் உள்ளிட்ட போலீசார், சேமங்கலம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த மினி லாரியை தடுத்து சோதனை செய்த போது ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், கள்ளக்குறிச்சி அருகே உள்ள சித்தலூர் கிராமத்தைச் சேர்ந்த கருப்பன் மகன் சொக்கநாதன் (19), முருகன் மகன் ஐயப்பன் (21) என்பது தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே மடப்பட்டு கிராமத்தில் தற்காலிகமாக தங்கியிருந்த வேலூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், அரிசியை வாங்கி மடப்பட்டுக்கு கடத்தி வர சொன்னதாக கூறினர். இதையடுத்து 3 ேபர் மீதும் போலீசார் வழக்கு பதிந்து, சொக்கநாதன், ஐயப்பன் இருவரையும் கைது செய்து விழுப்புரம் குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் தலைமறைவான பெண்ணை திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
