×

சாயர்புரம் அருகே பராமரிப்பின்றி பாழான நட்டாத்தி- மீனாட்சிப்பட்டி சாலையில் ராட்சத குழிகளால் விபத்து அபாயம்

*கிராம மக்கள் கடும் அவதி

ஏரல் : சாயர்புரம் அருகே பராமரிப்பின்றி பாழான நட்டாத்தி- மீனாட்சிப்பட்டி சாலையில் உருவான ராட்சத குழிகளால் விபத்து அபாயம் நிலவுகிறது. இதனால் கடும் அவதிக்கு உள்ளாகும் மக்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதில் தனிக்கவனம் செலுத்தி போர்க்கால அடிப்படையில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் அருகே நட்டாத்தியில் இருந்து மீனாட்சிப்பட்டி செல்லும் மெயின் ரோடானது குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு லாய்க்கற்ற நிலையில் உள்ளது.

பெருங்குளம், பண்ணைவிளை, பண்டாரவிளை, நட்டாத்தி, பட்டாண்டிவிளை, சுப்பிரமணியபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதி மக்கள் நெல்லைக்கு சென்று வர நட்டாத்தியில் இருந்து மீனாட்சிப்பட்டி வழியாக வாகைக்குளம் சென்று அங்கிருந்து நெல்லை பைபாஸ் ரோடு வழியாக செல்ல எளிதாக இருப்பதால் அதிக அளவு மக்கள் இந்த ரோட்டை பயன்படுத்தி வருகிறார்கள்.

அதேபோல் நட்டாத்தியில் இருந்து ஸ்ரீவைகுண்டம் செல்வதற்கும் இந்த ரோடு வழியாக சென்று மீனாட்சிப்பட்டியில் இருந்து பேட்மாநகரம் வழியாக சென்று வருகின்றனர்.

மேலும் மீனாட்சிப்பட்டியில் உள்ள ஹோலிகிராஸ் பொறியியல் கல்லூரிக்கும் செல்லும் மாணவ, மாணவிகளும் இந்த ரோட்டை அதிக அளவு பயன்படுத்தி வருகின்றனர். இப்படி முக்கிய ரோடாக உள்ள இந்த சாலையில் மின்விளக்கு வசதி இல்லாத காரணத்தினால் இரவு நேரத்தில் சாலையில் குண்டும், குழி இருப்பது தெரியாமல் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது.

இதனால் தினமும் கடும் அவதிக்கு உள்ளாகும் வாகனஓட்டிகள் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினரும் இதுவிஷயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தனிக்கவனம் செலுத்தி தக்க நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

கனரக வாகனத்தால் சேதம்: இதுகுறித்து நட்டாத்தி பஞ்சாயத்து முன்னாள் தலைவர் எஸ்.வி.பி.எஸ். பண்டாரம் கூறுகையில் ‘‘நட்டாத்தியில் இருந்து மீனாட்சிப்பட்டி வழியாக நெல்லைக்கு செல்ல இப்பாதை சாட்கட் என்பதால் அதிக அளவு மக்கள் இந்த ரோட்டை பயன்படுத்தி வருகிறார்கள்.

ஆனால் இந்த ரோடானது பேட்மாநகரம் அருகே உள்ள கல்குவாரிகளில் இருந்த அதிக கல் லோடு ஏற்றி வரும் லாரிகள் சாயர்புரம் வழியாக செல்வதற்காக இந்த சாலையை அதிக அளவு பயன்படுத்தி வருவதால் எந்த ரோடு எளிதாக பளுதாகிவிடுகிறது.

இந்த ரோட்டில் அதிக அளவு கனரக வாகனங்கள் சென்று வருவதால் ஸ்ரீவை. யூனியன் கைவசமாக உள்ள இந்த ரோட்டை நெடுஞ்சாலை துறைக்கு மாற்றம் செய்து நெடுஞ்சாலை துறை மூலம் இந்த ரோட்டை தரம் உயர்த்தி அமைத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

Tags : Natathi-Meenadchipatti road ,Sayarpuram ,Natati-Meenadchipatti road ,
× RELATED முத்திரை திட்டங்களின் (Iconic Projects)...