×

இந்திய தூதரகத்திற்கு அச்சுறுத்தல்; வங்கதேச தூதரை அழைத்து வெளியுறவு துறை கண்டனம்: டாக்காவில் விசா மையம் மூடல்

புதுடெல்லி: வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா பதவியிழந்து இந்தியாவில் தஞ்சமடைந்த பிறகு, இந்தியா-வங்கதேசம் இடையேயான உறவு சீர்குலைந்துள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன் அங்குள்ள தேசிய மக்கள் கட்சி தலைவர் ஹஸ்னத் அப்துல்லா பொது வெளியில் பேசுகையில், ‘‘இந்தியாவின் எதிரிகளுக்கு அடைக்கலம் தருவோம். வடகிழக்கு மாநிலங்களை இந்தியாவிடமிருந்து பிரிப்போம்’’ என பேசி உள்ளார்.

இந்நிலையில், வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள இந்திய தூதரத்தின் பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பாக டெல்லியில் உள்ள இந்தியாவுக்கான வங்கதேச தூதர் ஹமிதுல்லாவுக்கு வெளியுறவு அமைச்சகம் சம்மன் அனுப்பி நேற்று நேரில் கவலை தெரிவித்தது. டாக்காவில் உள்ள இந்திய தூதரகத்தை சுற்றி பாதுகாப்பு சூழல் உருவாக்க திட்டமிட்டுள்ளதாக தீவிரதாத அமைப்பு ஒன்று கூறியது தொடர்பாக ஹமிதுல்லாவிடம் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இச்சம்பவங்கள் குறித்து வங்கதேச இடைக்கால அரசு முழுமையாக விசாரணை நடத்தாதது துரதிஷ்டவசமானது என வங்கதேச தூதரிடம் தெரி விக்கப்பட்டது. இதற்கிடையே, தற்போதைய பாதுகாப்பு சூழலை கருத்தில் கொண்டு டாக்காவில் உள்ள இந்திய விசா விண்ணப்ப மைய அலுவலகம் நேற்று பிற்பகல் 2 மணி முதல் மூடப்பட்டுள்ளது. இந்திய விசா கோரிய விண்ணப்பதாரர்களுக்கான நேர்காணல் வேறு தேதிக்கு மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய தூதரகத்தை நோக்கி பேரணி
வங்கதேசத் தலைநகர் டாக்காவில் உள்ள இந்திய உயர் தூதரகத்தை நோக்கி பேரணியாக ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் சென்றனர். அவர்களை நேற்று போலீசார் தடுத்து நிறுத்தினர். ஜூலை ஒற்றுமை என்ற பதாகையின் கீழ் பேரணியாகச் சென்ற போராட்டக்காரர்கள், இந்தியாவுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பியதுடன், கடந்த ஆண்டு ஜூலை எழுச்சியின் போதும் அதற்குப் பின்னரும் நாட்டை விட்டுத் தப்பி ஓடிய முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் பிறரை நாடு கடத்த வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்தனர். நேற்று மதியம் டாக்காவில் உள்ள ராம்புரா பாலத்தில் இருந்து தொடங்கிய பேரணி, இந்திய தூதரக அலுவலகம் அமைந்துள்ள வட பத்தாவில் உள்ள ஹொசைன் சந்தை அருகே வந்த போது போலீசார் தடுத்து நிறுத்தினர். அங்கு போராட்டக்காரர்கள் இந்தியாவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பத் தொடங்கி, ஹசீனாவை நாடு கடத்த வேண்டும் என்று கோரினர்.

Tags : External Affairs Ministry ,Dhaka ,New Delhi ,Sheikh Hasina ,India ,Bangladesh ,National People's Party ,Hasnat Abdullah ,
× RELATED செபி உள்ளிட்ட 3 சட்டங்களை...