×

போதை வழக்கில் எம்பி சிக்கிய விவகாரம்; ஒழுக்கம் தவறினால் கடும் நடவடிக்கைகள் பாயும்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆவேசம்

திருமலை: மக்கள் பிரதிநிதிகளுக்கு ஒழுக்கம் முக்கியம், தவறினால் கடும் நடவடிக்கைகள் பாயும் என போதை வழக்கில் எம்பி சிக்கிய விவகாரத்தை மேற்கொள்காட்டி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆவேசமாக பேசினார். தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் ஐதராபாத் மொய்னாபாத்தில் உள்ள பி.ஆர்.எஸ். கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பைலட் ரோஹித் ரெட்டியின் பண்ணை வீட்டில் கடந்த 14ம் தேதி இரவு போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ​​பைலட் ரோஹித் ரெட்டி மற்றும் தெலுங்கு தேச கட்சியை சேர்ந்த ஏலூர் எம்.பியுமான புட்டா மகேஷ்குமார், டெல்லியைச் சேர்ந்த நமித்சர்மா உள்ளிட்ட பலரை போலீசார் கைது செய்தனர். அங்கு நடத்தப்பட்ட சோதனைகளில் புட்டா மகேஷ்குமார் மற்றும் பைலட் ரோஹித் ரெட்டி உள்ளிட்ட 6 பேரும் போதை மருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது.

இதில் புட்டா மகேஷ்குமார் எம்.பி. என்பதால் காவல் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த விவகாரம் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தெலுங்கு தேசம் கட்சியும் பி.ஆர்.எஸ். கட்சியும் புட்டா மகேஷ்குமார் மற்றும் பைலட் ரோஹித் ரெட்டிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தன. இந்நிலையில் ஆந்திர மாநிலம் அமராவதியில் நேற்று திருப்பதி மாவட்டத்தை சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏக்கள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை மரியாதை நிமித்தமாக நேற்று சந்திக்க வந்தனர்.

அப்போது அவர்களிடம் போதை வழக்கில் சிக்கிய எம்.பி. புட்டா மகேஷ்குமார் விவகாரம் குறித்து குறிப்பிட்டு முதல்வர் பேசியதாவது:
அரசியல் பின்னணி கொண்ட குடும்பத்திலிருந்து வந்த இளைஞர் என்பதால் அவருக்கு கட்சி சார்பில் எம்பி தேர்தலில் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அவர் இதுபோன்று நடந்து கொள்வார் என நினைத்துக்கூட பார்க்கவில்லை. அதுவும் வேற்று (பிஆர்எஸ்) கட்சியினருடன் இணைந்து இதுபோன்ற செயலில் அவர் ஈடுபட்டுள்ளார்.

கடந்த காலங்களில் ஒழுக்கத்தை மீறியவர்கள் எவ்வளவு செல்வாக்கு மிக்கவர்களாக இருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒழுக்கத்தை பின்பற்றாமல் அரசியல் செய்வது சரியல்ல. கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதை ஏற்க முடியாது. தெலுங்கு தேசம் கட்சியில் உள்ள அனைத்து தலைவர்களும் ஒழுக்கத்துடன் நடந்துகொள்ளவேண்டும். யாருக்கும் எந்தவித சலுகையும் வழங்கப்படாது. அதனை ஒவ்வொரு நிர்வாகியும், மக்கள் பிரதிநிதியும் நினைவில் கொள்ளவேண்டும். ஒழுக்கம் முக்கியம், தவறினால் கடும் நடவடிக்கைகள் பாயும். இவ்வாறு ஆவேசத்துடன் முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசினார்.

Tags : AP ,Chandrababu Naidu ,THIRUMALI ,CHANDRABABU NAIUD ,Moinabad, Hyderabad, Rangareti District, Telangana State ,
× RELATED ஓய்வு பெறும் 59 எம்பிக்களுக்கு...