×

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் 74 எம்எல்ஏக்களுக்கு சீட் வழங்க மறுப்பு: முதல்வர் மம்தா அதிரடி

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் உள்ள 294 தொகுதியில் 291 தொகுதிக்கான வேட்பாளர் பட்டியலை முதல்வர் மம்தா தலைமையிலான ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அறிவித்து விட்டது. தற்போது எம்எல்ஏக்களாக உள்ள 74 பேருக்கு சீட் வழங்கவில்லை. இதனால் மாநிலம் முழுவதும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. அம்தங்கா தொகுதியில் தொடர்ந்து மூன்று முறை எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்ட ரபிகுர் ரஹ்மானுக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவருக்கு பதிலாக, பீர்பாதா காசெம் சித்திக்கியை அத்தொகுதிக்கான வேட்பாளராகக் கட்சி அறிவித்ததைத் தொடர்ந்து, அங்குப் போராட்டங்கள் வெடித்தன. ரஹ்மானின் ஆதரவாளர்கள் மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள அம்தங்கா-காகினாரா சாலையை மறித்து, டயர்களை எரித்தனர்; மேலும் ரஹ்மானுக்கு ஆதரவாகவும், கட்சிக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர்.

இதே போல் ராஜ்கஞ்ச் தொகுதி எம்.எல்.ஏ-வான ககேஸ்வர் ராய்க்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் ஜல்பைகுரி மாவட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இவரும் 3 முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டவர். அந்த தொகுதியில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் தங்கப் பதக்க வீராங்கனை ஸ்வப்னா பர்மன் நிறுத்தப்பட்டிருக்கிறார். மேலும் ஜல்பைகுரி மாவட்ட திரிணாமுல் காங்கிரஸின் தலைவர் பதவியிலிருந்து ராய் விலகினார். அவர் கூறுகையில்,’ யாரோ பணம் கொடுத்திருக்க வேண்டும்; அதனால்தான் என் பெயர் வேட்பாளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது. எனக்கு இழைக்கப்பட்ட அநீதியின் காரணமாகவே நான் கட்சிப் பதவியை ராஜினாமா செய்துள்ளேன் ’ என்றார்.

சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு அசாம் காங். எம்பி திடீர் ராஜினாமா: பா.ஜவில் இணைந்தார்
கவுகாத்தி: அசாம் மாநிலம் நெவ்காங் மக்களவை தொகுதி காங்கிரஸ் எம்பி பிரத்யுத் பர்தோலோய். 50 ஆண்டுகளாக காங்கிரசில் பணியாற்றிய இவர், கடந்த 2019 முதல் மக்களவை எம்பியாக உள்ளார். நேற்று முன்தினம் இவர் திடீரென தனது எம்பி பதவி மற்றும் கட்சி பதவிகளை ராஜினாமா செய்தார். நேற்று டெல்லியில் நடைபெற்ற நிகழ்வில், முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா மற்றும் பிற பாஜ தலைவர்கள் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். பர்தோலோய் கூறுகையில், ‘கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கட்சியில் தாம் அவமதிப்பைச் சந்தித்து வந்ததாகவும், அதுவே தாம் விலகுவதற்கு முக்கியக் காரணம். அதே சமயம் பாஜ தலைமையிலான அரசு அசாம் மாநிலத்தில் மேற்கொண்டு வரும் ஆக்கபூர்வமான பணிகளே, நான் பா.ஜவில் இணைய காரணம்’ என்றார்.

முதல்வர் ஹிமந்தாபிஸ்வா கூறுகையில்,’ 1975ஆம் ஆண்டு முதல் காங்கிரஸ் உறுப்பினராக இருந்த பிரத்யுத் பர்தோலோய் பாஜவில் இணைந்தது, கட்சியை மேலும் வலுப்படுத்தும். வரும் தேர்தலில் பர்தோலோய்க்குச் சீட்டு வழங்குமாறு தலைமைக்கு நாங்கள் பரிந்துரை செய்வோம். அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியில் உள்ள நல்ல தலைவர்கள் அனைவரும் பா.ஜவுக்கு வர வேண்டும்’ என்று அழைப்பு விடுத்தார்.

மம்தாவுக்கு எதிராக வேட்பாளர் பாபர்மசூதி கட்டும் நபர் அறிவிப்பு
மேற்குவங்கத்தில் பாபர் மசூதி கட்டுவதாக அறிவித்ததால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட தலைவர் ஹுமாயூன் கபீரின் கட்சி 182 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. ஆம் ஜனதா உன்னயன் என்ற பெயரில் கட்சி ஆரம்பித்துள்ள அவர், பவானிபூர் தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிராக ஒரு முஸ்லிம் வேட்பாளரை நிறுத்தப்போவதாக தெரிவித்துள்ளார்.

துரதிர்ஷ்டவசமானது பிரியங்கா வருத்தம்
அசாம் தேர்தல் பொறுப்பாளரான பிரியங்கா காந்தி, காங்கிரஸ் எம்.பி. பிரத்யுத் போர்டோலோய் தனது பதவியை ராஜினாமா செய்தது துரதிர்ஷ்டவசமானது என்று தெரிவித்தார். அவர் கூறுகையில்,;வேட்பாளர் ஒதுக்கீடு தொடர்பாக பிரத்யுத் அதிருப்தியில் இருந்ததாக நான் கருதுகிறேன். அவருடன் ஒருமுறை பேசிப் பார்க்கும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்திருக்க வேண்டும்; இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது’ என்றார்.

மகன் காங். வேட்பாளர் 2 முறை எம்.பியாகவும்,
4 முறை எம்எல்ஏவாகவும் , அசாம் அமைச்சராகவும் பதவி வகித்த பர்தோலோய், தற்போதைய அசாம் சட்டமன்றத் தேர்தல்களுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் தலைவராகவும்இருந்தார். அவரது ராஜினாமா பற்றிய தகவல் அறிந்து மாநில காங்கிரஸ் தலைவர் கவுரவ் கோகாய் செவ்வாய்க்கிழமை இரவு பர்தோலோயைச் சந்தித்துப் பேச விரைந்தார். எனினும் அவரது முடிவை மாற்ற முடியவில்லை. இதற்கிடைய அசாம் சட்டப்பேரவை தேர்தலில் மார்கெரிட்டா தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராகப் பர்தோலோயின் மகன் பிரதீக் போட்டியிடுகிறார்.

5 மாநில பேரவை தேர்தல்: 25 லட்சம் பணியாளர்கள் நியமனம்
5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் 8.5 லட்சம் பாதுகாப்புப் பணியாளர்கள் உட்பட மொத்தம் 25 லட்சம் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தேர்தல் ஆணையம் நேற்று தெரிவித்து உள்ளது.
இந்த தேர்தலில் 5 மாநிலங்களிலும் வாக்களிக்க, மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர். சுமார் 15 லட்சம் வாக்குப்பதிவு அதிகாரிகள், 8.5 லட்சம் பாதுகாப்புப் பணியாளர்கள், 40,000 வாக்கு எண்ணிக்கைப் பணியாளர்கள், 49,000 நுண் பார்வையாளர்கள், 21,000 துறைசார் அதிகாரிகள் மற்றும் வாக்கு எண்ணிக்கையின்போது கண்காணிப்புப் பணியில் ஈடுபடும் 15,000 நுண் பார்வையாளர்கள் உள்ளிட்டோரும் இதில் இடம் பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Tags : Western Legislative ,Mamata Aktiadi ,KOLKATA ,TRINAMUL CONGRESS ,MAMTA ,STATE OF WEST BENGAL ,
× RELATED ஓய்வு பெறும் 59 எம்பிக்களுக்கு...