- கடற்படை
- அதிபர் டிரம்ப்
- வாஷிங்டன்
- எங்களுக்கு
- வெனிசுலா அர
- கடற்படை
- பனிப்போர்
- ஜனாதிபதி
- நிக்கோலா மடுரோ
- ஐக்கிய மாநிலங்கள்
வாஷிங்டன்: வெனிசுலா அரசை பயங்கரவாத அமைப்பாக அறிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், அந்நாட்டு எண்ணெய் கப்பல்களைத் தடுத்து நிறுத்தக் கடற்படைக்கு உத்தரவிட்டுள்ளார். வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ தலைமையிலான அரசுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே நீண்ட காலமாகப் பனிப்போர் நிலவி வருகிறது. மதுரோ தலைமையிலான குழு போதைப் பொருள் கடத்தல் மற்றும் ஆட்கடத்தல் செயல்களில் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டிய அமெரிக்கா, கடந்த நவம்பர் மாதம் ‘கார்டெல் டி லாஸ் சோல்ஸ்’ என்ற அமைப்பை பயங்கரவாத இயக்கமாக அறிவித்தது. மேலும், கரீபியன் கடல் பகுதியில் தனது கடற்படை பலத்தை அதிகரித்த அமெரிக்கா, அண்மையில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியது.
குறிப்பாக கடந்த 10ம் தேதி வெனிசுலா கடற்பகுதியில் தடை செய்யப்பட்ட எண்ணெய் கப்பலை அமெரிக்கப் படைகள் சிறைபிடித்தது இரு நாடுகளுக்கிடையேயான மோதலை உச்சக்கட்டத்திற்குக் கொண்டு சென்றது. இந்நிலையில், வெனிசுலா அரசை ‘வெளிநாட்டுப் பயங்கரவாத அமைப்பு’ என்று அதிபர் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘எங்களிடமிருந்து திருடப்பட்ட எண்ணெய், நிலம் மற்றும் சொத்துக்களைத் திரும்ப ஒப்படைக்கும் வரை வெனிசுலாவிற்கு எதிரான ராணுவ அழுத்தம் தொடரும்.
வெனிசுலாவிலிருந்து வரும் மற்றும் செல்லும் அனைத்து எண்ணெய் கப்பல்களையும் முழுமையாகத் தடுத்து நிறுத்த கடற்படைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தென் அமெரிக்க வரலாற்றிலேயே மிகப்பெரிய கடற்படைப் பிரிவு வெனிசுலாவைச் சூழ்ந்துள்ளது’ என்றும் டிரம்ப் குறிப்பிட்டார். இதற்குப் பதிலடி கொடுத்துள்ள வெனிசுலா அதிபர் மதுரோ, ‘எங்களது எண்ணெய் மற்றும் எரிவாயு வளத்தைக் கொள்ளையடிக்கவும், வெனிசுலாவை காலனியாக்கவும் அமெரிக்கா முயற்சிக்கிறது; எங்களது இறையாண்மையை நாங்கள் பாதுகாப்போம்’ என்று ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
