×

அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா-ஜோர்டான் வர்த்தகம் இரட்டிப்பு: பிரதமர் மோடி உறுதி

அம்மான்: அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா-ஜோர்டான் வர்த்தகமானது 5 பில்லியன் அமெரிக்க டாலராக இரட்டிப்பாக்குவதற்கு பிரதமர் மோடி முன்மொழிந்துள்ளார். ஜோர்டான் நாட்டின் மன்னர் இரண்டாவது அப்துல்லாவின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி இரண்டு நாள்அரசு முறை பயணமாக நேற்று முன்தினம் ஜோர்டான் சென்றார். நேற்று பிரதமர் மோடியும் ஜோர்டான் மன்னர் இரண்டாவது அப்துல்லாவும் தலைநகர் அம்மானில் நடந்த இந்தியா-ஜோர்டான் வர்த்தக மன்றத்தில் உரையாற்றினார்கள்.

பட்டத்து இளவரசர் ஹூசைன் மற்றும் ஜோர்டானின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர், முதலீட்டுத்துறை அமைச்சர் உள்ளிட்டோரும் இதில் கலந்து கொண்டனர். இதில் பேசிய மன்னர் இரண்டாவது அப்துல்லா, ஜோர்டானின் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களையும், இந்தியாவின் பொருளாதார வலிமையையும் இணைத்து தெற்காசியா மற்றும் மேற்கு ஆசியா மற்றும் அதற்கு அப்பாலும் ஒருபொருளாதார வழித்தடத்தை உருவாக்க முடியும் என்றார். தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி,\\” உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்கும் பாதையில் , வேகமாக வளர்ந்து வரும் ஒரு முக்கிய பொருளாதார நாடாக இந்தியா விளங்குகிறது.

இந்தியா, ஜோர்டானிலும் உலகெங்கிலும் உள்ள அதன் கூட்டாளிகளுக்கு மகத்தான வணிக வாய்ப்புக்களை வழங்குகின்றது. இந்தியாவுக்கும் ஜோர்டானுக்குமான உறவு என்பது வரலாற்று நம்பிக்கை மற்றும் எதிர்கால பொருளாதார வாய்ப்புக்கள் ஒன்றிணையும் ஒரு உறவாகும். ஜோர்டான் நிறுவனங்கள் இந்தியாவுடன் கூட்டு சேர்ந்து, அதன் 140 கோடி கொண்ட நுகர்வோர் சந்தை, வலுவான உற்பத்தித் தளம் மற்றும் நிலையான , வெளிப்படையான மற்றும் கணிக்கக்கூடிய கொள்கை சூழல் ஆகியவற்றின் பலன்களை பெற வேண்டும். இந்தியா ஜோர்டானின் மூன்றாவது பெரிய வர்த்தக பங்குதாரர்.

அடுத்த 5 ஆண்டுகளில் ஜோர்டானுடனான இருதரப்பு வர்த்தகத்தை 5 பில்லியன் அமெரிக்க டாலராக இரட்டிப்பாக்கப்படும். டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, தகவல் தொழில்நுட்பம், பின்டெக், ஹெல்த் -டெக் மற்றும் அக்ரி டெக் ஆகிய துறைகளில் இந்தியா-ஜோர்டான் ஒன்றிணைந்து செயல்பட இரு நாடுகளின் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்\\” என்றார். பிரதமர் மோடியை ஜோர்டான் பட்டத்து இளவரசர் இரண்டாவது அல் உசைன் பின் அப்துல்லா தனது காரில் அருங்காட்சியகத்துக்கு அழைத்துச்சென்றார். இது குறித்து பிரதமர் மோடி தனது சமூக ஊடக தளத்தில்,‘‘ஜோர்டான் பட்டத்துக்கு இளவரசருடன் விரிவாக கலந்துரையாடினேன். ஜோர்டானின் முன்னேற்றத்தின் மீதான அவரது ஆர்வம் தெளிவாக தெரிகிறது” என்று குறிப்பிட்டுள்ளார். பின்னர், பிரதமர் மோடி எத்தியோப்பியா புறப்பட்டுச்சென்றார்.

* ஜோர்டான் இளவரசரை தொடர்ந்து மோடிக்கு கார் ஓட்டிய எத்தியோப்பிய பிரதமர்
பிரதமர் மோடி தனது ஜோர்டான் பயணத்தை நிறைவு செய்து விட்டு எத்தியோப்பா சென்றுள்ளார். அங்கு அடிஸ் அபாபா விமான நிலையத்தில் பிரதமர் மோடியை நேரில் வரவேற்ற அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற எத்தியோப்பியா பிரதமர் அபி அகமது தனது காரில் மோடியை ஏற்றிக்கொண்டு ஓட்டலுக்கு சென்றார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சிமாநாட்டின் போது விளாடிமிர் புடினுடன், பிரதமர் மோடி காரில் பயணம் மேற்கொண்டார். அதை தொடர்ந்து இந்தியா வந்த புடினை தனது காரில் மோடி அழைத்துச்சென்றார். ஜோர்டான் பட்டத்து இளவரசர் அல் ஹுசைன் பின் அப்துல்லா II, பிரதமர் மோடியை அம்மான் நகரில் உள்ள ஜோர்டான் அருங்காட்சியகத்திற்கு காரில் அழைத்துச் சென்றார். அதில், பிரதமர் முன் இருக்கையில் அமர்ந்திருக்க, பட்டத்து இளவரசர் காரை ஓட்டினார். தற்போது எத்தியோப்பியா பிரதமரும், பிரதமர் மோடியை அமர வைத்து கார் ஓட்டி பெருமைப்படுத்தி உள்ளார்.

Tags : India ,Jordan ,PM Modi ,Amman ,Modi ,King Abdullah II… ,
× RELATED ‘நேட்டோ’ கனவை கைவிடுகிறார் ஜெலன்ஸ்கி;...