×

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி அன்புமணி தலைமையில் சென்னையில் பாமக சார்பில் ஆர்ப்பாட்டம்: அதிமுக, தவெக புறக்கணிப்பு; பாஜக பங்கேற்பு

 

சென்னை: பாமக தலைவர் அன்புமணி தலைமையில் சென்னையில் இன்று பாமக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய கட்சிகள் கலந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிரதான கட்சிகளான அதிமுக, தவெக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே உட்கட்சிப்பூசல் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு மேலாகவே நீடித்து வரும் நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி இரு அணிகளாகவே செயல்பட்டு வருகிறது. மேலும், இந்த இரண்டு அணிகளுக்கு இடையே மோதல் போக்குகள் தினம் தினம் புதுப்புது உச்சத்தை எட்டிக் கொண்டிருக்கின்றன. இதற்கிடையே, பாமகவின் சின்னமான மாம்பழ சின்னம் பெறுவதில் இரு தரப்புக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதற்கிடையே தமிழ்நாட்டில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அன்புமணி தரப்பு பாமக சார்பில் போட்டியிட விரும்பும் கட்சியினரிடம் விருப்ப மனு பெற்று வருகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி அன்புமணி தரப்பு பாமக இன்று ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

அதாவது, கடந்த அதிமுக ஆட்சியின் போது வன்னியர் சமூக மக்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீட்டை வழங்கி சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதை தொடர்ந்து நிறைவேற்றப்பட்ட 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு சட்டத்தை நீதிமன்றம் ரத்து செய்தது. இத்தகைய சூழலில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதை கோரிக்கையாக வைத்து ஆர்ப்பாட்டம் நடத்த அன்புமணி அனைத்து கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க திமுகவை தவிர மற்ற அனைத்து கட்சிகளுக்கும், அமைப்புகளுக்கும் பாமக தரப்பில் நேரில் அழைப்பு விடுக்கப்பட்டது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பாமக வழக்கறிஞர் பாலு தலைமையிலான குழு சந்தித்து ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. அதேபோல, தவெக நிர்வாகிகள் புஸ்சி ஆனந்த், கேஏ செங்கோட்டையனை சந்தித்தும் பாலு அழைப்பு விடுத்து இருந்தார். இதனால், சென்னையில் இன்று நடைபெறும் பாமக ஆர்ப்பாட்டத்தில் மேற்கூறிய கட்சிகள் பங்கேற்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் இந்த கூட்டத்தில் பங்கேற்றால் அது கூட்டணிக்கு அச்சாரமாக அமையும் என்றும் கருதப்பட்டது. இந்நிலையில், சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் இன்று காலை பாமக சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமை வகித்தார். எம்எல்ஏக்கள் சிவக்குமார், சதாசிவம், வெங்கடேஷ்வரன், வழக்கறிஞர் பாலு உள்ளிட்ட பாமகவினர் கலந்து கொண்டனர். மேலும், பாஜக சார்பில் மாநில துணை தலைவர் கரு நாகராஜன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு, அமமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செந்தமிழன் உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்த முக்கிய கட்சிகள் இதில் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிரதான முக்கிய கட்சிகளான அதிமுக மற்றும் தவெக உள்ளிட்ட கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்தது. இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அன்புமணி இன்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தும் சூழலில், பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று தைலாபுரத்தில் பாமக நிர்வாகக் குழு கூட்டத்தை நடத்தினார். பாமக விவகாரம் பற்றி எரிந்து வரும் சூழலில் அன்புமணி ஆர்ப்பாட்டம் நடத்தும் நாளிலேயே ராமதாஸ் ஆலோசனை நடத்தி வருவது பாமகவில் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags : PMK ,Anbumani ,Chennai ,AIADMK ,TMC ,BJP ,
× RELATED மகளிர் சுய உதவிக் குழுக்கள்...