புதுக்கோட்டை, டிச.17: கூட்டுறவு சங்கங்களில் விண்ணப்பதித்து காத்திருக்கும் விவசாயிகளுக்கு பயிர்கடன் மற்றும் விவசாய நகைக்கடன்களை உடனடியாக வழங்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மதியழகன் தலைமையில் புதுக்கோட்டையில் நடைபெற்றது. மாநிலக்குழு முடிவுகளை விளக்கி மாநில செயற்குழு உறுப்பினர் பாண்டி பேசினார். மாநிலக்குழு உறுப்பினர் சின்னதுரை எம்எல்ஏ., மாவட்டச் செயலாளர் சங்கர் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு கடன் சங்கங்களிலும் விவசாயிகள் பயிர்கடன் மற்றும் விவசாய நகைக்கடனுக்கு ஏராளமானோர் விண்ணப்பித்து காத்திருக்கின்றனர். விண்ணப்பித்து இரண்டு மாதங்களைக் கடந்தும் பெறும்பாலான கூட்டுறவு சங்ககளுக்கு வழங்க வேண்டி கடன் தொகைகளை மத்திய கூட்டுறவு வங்கிகள் வழங்க மறுத்து வருகின்றனர். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் இருந்து எங்களுக்கு உத்தரவு வரவில்லை என கைவிரிக்கும் போக்கு நீடிக்கிறது. ஏற்கனவே கடன் பெற்று திரும்பச் செலுத்தியவர்கள் தான் பெரும்பகுதியினர் மீண்டும் விண்ணப்பித்துள்ளனர்.
அவர்களில் பெரும்பகுதியினர் கூட்டுறவு சங்கங்களில் திரும்ப கடன் வாங்கி செலுத்திவிடலாம் என நினைத்து தனியாரிடம் கடன் பெற்றே இந்தக் கடனை அடைத்துள்ளனர். விண்ணப்பித்து இரண்டு மாதங்களாகியும் கடன் கிடைக்காததால் தனியாரிடம் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எனவே, கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடனுக்காகவும், விவசாய நகைக்கடனுக்காகவும் விண்ணப்பித்து காத்திருக்கும் அனைவருக்கும் உடனடியாக கடன் தொகைகளை மத்திய கூட்டுறவு வங்கிகள் விடுவிக்க வேண்டும்.
புதுக்கோட்டை மாநாகராட்சியில் இணைக்கப்பட்ட ஊராட்சிப் பகுதிகளுக்கு எந்தவிதமான அடிப்படை வசதிகளையும் மாநகராட்சி நிர்வாகம் செய்து கொடுக்கவில்லை. ஏற்கனவே, அவர்கள் ஊராட்சியாக இருந்தபோது பெற்ற சலுகைகளையும் இழந்துள்ளனர். இந்நிலையில், மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பிறகும், அங்கு எந்த விதமான அடிப்படை வசதிகளும் செய்யப்படாமல் இருப்பது ஏற்புடையது அல்ல. எனவே, புதுக்கோட்டை மாநராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளுக்கு போர்க்கால அடிப்படையில் சாலை, குடிநீர், தெருவிளக்கு, தூய்மைப் பணி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
