×

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகள் நியமன விவகாரம்; அமலாக்கத்துறை கடிதம் அடிப்படையில் வழக்குப்பதிய கோரி மனு: அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில், உதவிப் பொறியாளர், இளநிலை பொறியாளர், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட 2,538 பணியிடங்களுக்கு 2024-25ம் நிதியாண்டில் நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒரு பதவிக்கு 25 லட்சம் முதல் 35 லட்சம் வரை என மொத்தம் 634 கோடி ரூபாய் லஞ்சமாக பெறப்பட்டுள்ளதாக வழக்குப்பதிவு செய்யக் கோரி அமலாக்கத் துறை தமிழக டிஜிபிக்கு கடந்த அக்டோபர் மாதம் கடிதம் அனுப்பியிருந்தது.

இந்த கடிதத்தின் அடிப்படையில், இது சம்பந்தமாக தலைமைச் செயலாளரிடம் உரிய அனுமதிகளைப் பெற்று, வழக்குப்பதிவு செய்யுமாறு தமிழக டிஜிபிக்கு உத்தரவிடக் கோரி, மதுரையைச் சேர்ந்த ஆதிநாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவில், உரிய ஆதாரங்களுடன் 232 பக்கங்கள் கொண்ட கடிதத்தை அமலாக்கத் துறை அனுப்பியுள்ளது. விசாரணைக்கு உரிய குற்றம் நடந்துள்ளதாக நம்பத் தகுந்த தகவல்கள் கிடைத்தால் அதன் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டியது காவல்துறையின் கடமை.

அமலாக்கத்துறைக்கு ஊழல் வழக்குகளை பதிவு செய்ய நேரடியான அதிகார வரம்பு இல்லை என்பதால், வழக்கு பதிவு செய்யும்படி டிஜிபிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதன்மீது வழக்கு பதிவு செய்யாததால் அமலாக்கதுறை விசாரணை நடத்த முடியவில்லை என்று கோரப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.வஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு, ஜனவரி 23ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசு, டிஜிபி மற்றும் அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது. இதேபோல மணல் குவாரி முறைகேடு தொடர்பாக அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய தமிழக டிஜிபிக்கு உத்தரவிடக் கோரி அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனுவையும், ஜனவரி 23ம் தேதிக்கு தலைமை நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

Tags : Municipal Administration and Drinking Water Supply Department ,Enforcement Department ,Chennai ,Tamil Nadu Municipal Administration and Drinking Water Supply Department ,
× RELATED மகளிர் சுய உதவிக் குழுக்கள்...