×

10 ஆண்டு கால வலிப்பு நோய் கதிரியக்க அறுவை சிகிச்சை மூலம் மாணவருக்கு சிகிச்சை: அப்போலோ கேன்சர் சென்டர் தகவல்

சென்னை: 10 ஆண்டு கால வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட மாணவருக்கு ‘கதிரியக்க அறுவைசிகிச்சை’ மூலம் அப்போலோ கேன்சர் சென்டர் வெற்றிகரமாக சிகிச்சை அளித்துள்ளது. ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியைச் சேர்ந்த இளம் பொறியியல் மாணவர் ஒருவரருக்கு சாதாரண வலிப்பாக இல்லாமல், சில நேரங்களில் காரணமே இல்லாமல் திடீரெனச் சிரிப்பார்; சில சமயங்களில் வெறுமனே வெறித்துப் பார்த்துக்கொண்டிருப்பார் அல்லது தன்னிச்சையாகத் தலையை அசைப்பார். இதைப் பார்த்த ஆசிரியர்கள் அவரை தவறாகப் புரிந்து கொண்டனர்; அவரது நண்பர்களோ இதைப் பெரிதுபடுத்தவில்லை. ஆனால் இது தொடர்ந்து இருந்ததால் அப்போலோ கேன்சர் சென்டருக்கு கொண்டு வந்து அவருக்கு ‘நியூரோ இமேஜிங்’ பரிசோதனை செய்யப்பட்டது.

அதில் மூளையின் மிக ஆழமான பகுதியான ஹைபோதலாமஸில், ‘ஹைபோதலாமிக் ஹமார்டோமா’ (hypothalamic hamartoma) எனப்படும் அரிய வகை கட்டி மறைந்திருந்தது தெரியவந்தது. இந்த நிலையில் கதிரியக்க அறுவைசிகிச்சையை பயன்படுத்தி சுற்றியுள்ள நல்ல திசுக்களைப் பாதிக்காமல், அந்தக் கட்டியை மட்டும் மிகத் துல்லியமாக நீக்க அப்போலோ கேன்சர் சென்டரின் கதிரியக்க அறுவைசிகிச்சை பிரிவின் முதுநிலை நிபுணர் டாக்டர் சங்கர் வங்கிபுரம் தலைமையிலான மருத்துவர்கள் குழுவினர் முடிவு செய்து ‘சைபர்நைப்’ எனப்படும் அதிநவீன ரோபோட்டிக் கதிரியக்கச் சிகிச்சையை மேற்கொள்வது என தீர்மானித்து வெற்றிகரமாக செய்து முடித்தனர்.

Tags : Apollo Cancer Center ,Chennai ,Rajahmundry, Andhra Pradesh ,
× RELATED கொளத்தூரில் ரூ.25.72 கோடியில் பேரறிஞர்...