×

திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரம் கோயில் நிர்வாகத்தில் ஐகோர்ட் தலையிட முடியாது: உச்சநீதிமன்ற தீர்ப்பை கூறி வாதம்

மதுரை: கோயில் நிர்வாகத்தில் உயர்நீதிமன்றங்கள் நேரடியாக தலையிட முடியாது என உச்சநீதிமன்ற தீர்ப்பை மேற்கோள் காட்டி ஐகோர்ட் கிளையில் வாதிடப்பட்டது. மதுரை அருகே திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கிய தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் தீர்ப்புக்கு எதிராக அறநிலையத்துறை மற்றும் மதுரை கலெக்டர் சார்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் அப்பீல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் முன் நடந்து வருகிறது. வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஸ்ரீதர் ஆஜராகி கூறியதாவது: இந்த விவகாரத்தில் கோயில் நிர்வாகத்திற்கே முழு உரிமையும், அதிகாரமும் உள்ளது. கோயில் நிர்வாகத்திற்கு சட்ட வழிமுறைகள், சட்ட விதிகள், அறநிலையத்துறை விதிகள் உள்ளன. தீபம் ஏற்றுவது தமிழ் கலாச்சாரத்தின் ஒரு பகுதி என தனி நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இது கோயில் கலாச்சாரத்தில் வரக்கூடிய நிகழ்வு. பல ஆண்டு காலமாக உச்சிப்பிள்ளையார் கோயில் அருகில் தான் தீபம் ஏற்றப்பட்டுள்ளது. கோயிலின் பழக்க வழக்கங்களை மாற்ற தனிநபர் கோரியுள்ளார். அது அவருக்கான உரிமை இல்லை.

மலை மீது விளக்கேற்றுவது வேறு, வீட்டில் விளக்கேற்றுவது வேறு. மனுதாரர் கார்த்திகை தீபத்தை, வீட்டு தீபம் போல நினைக்கிறார். கோயில் நிர்வாகத்தில் உயர் நீதிமன்றங்கள் நேரடியாக தலையிட முடியாது என உச்ச நீதிமன்றம் 2021ம் ஆண்டு தீர்ப்பில் தெளிவாக கூறியுள்ளது. உரிமையியல் நீதிமன்றத்தில் தான் வழக்கு தாக்கல் செய்து அதற்கான தீர்வு பெற முடியும். ஆகம விதிப்படி மலை உச்சியில் தீபமேற்றப்பட்டுள்ளது என்பதை மனுதாரர் நிரூபிக்கவில்லை. இந்த வழக்கில் கோயில் தரப்பு, அரசு தரப்பு, அறநிலையத்துறை தரப்பு முன்வைத்த வாதங்களை தனிநீதிபதி ஏற்கவில்லை. இவ்வாறு கூறி வாதத்தை நிறைவு செய்தார்.

தொடர்ந்து தர்கா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மோகன் கூறியதாவது: இந்து மக்கள் கட்சி, இந்து அமைப்புகள்தான் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என மனு தாக்கல் செய்கின்றனர். அதே போலத்தான் ராம.ரவிக்குமார் மனு செய்து உள்ளார். ஒவ்வொரு ஆண்டும் மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று இந்து அமைப்புகள் முயற்சி செய்கின்றன. ஆனால் மற்றவர்கள் யாரும் மனுக்கள் செய்வதில்லை. அதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்து முன்னணி அமைப்பினர் தர்கா அருகே தீபம் ஏற்றுவதற்கு முயற்சி செய்தனர்.

அதற்கு கலெக்டர் அனுமதி வழங்கவில்லை. அவர் அங்கு கல் தூண் என்றுதான் குறிப்பிட்டுள்ளார். அது சர்வே கல்லாக இருந்தாலும் சமணர் தூணாக இருந்தாலும் அது தீபத்தூண் இல்லை. தர்காவில் கந்தூரி நிகழ்வுகள் எங்களுக்கான எல்லைக்குள் நடக்கிறது. அதைத்தாண்டி நாங்கள் செல்லவில்லை. ஆர்டிஓ அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் தர்காவில் இருந்து 15 மீட்டருக்கு அப்பால் தீபம் ஏற்றலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது என தனி நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார். தர்காவின் எல்லைகள் இன்னும் வரையறுக்கப்படவில்லை. அவ்வாறு இருக்கையில் எப்படி இந்த உத்தரவு பிறப்பிக்க இயலும்?இவ்வாறு வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘‘தர்காவிற்கு அப்பால் இருந்து 15 மீட்டர் தொலைவில் கோயில் நிர்வாகம் தீபம் ஏற்றலாமா? தர்கா தரப்பு நிலைப்பாடு என்ன?’’ என கேள்வி எழுப்பினர். இதற்கு தர்கா தரப்பில் ஆஜரான மற்றொரு மூத்த வழக்கறிஞர் லஜபதி ராய், ‘‘தர்கா எல்லை தற்போது வரை வரையறை செய்யப்படவில்லை. திருப்பரங்குன்றம் மலை முழுவதும் நில அளவீடு பணி செய்த பின்னரே இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த இயலும். தர்காவிற்கு சொந்தமான நிலம் எவ்வளவு என்ற உரிமை குறித்த பிரச்னை தற்போது பிரதானமாக உள்ளது.

மதுரையில் அழகர் வைகை ஆற்றில் இறங்கும்போது இஸ்லாமியர்கள் வரவேற்று பக்தர்களுக்கு நீர், மோர் உள்ளிட்டவை வழங்குகின்றனர். இதுபோன்ற மத நல்லிணக்கம் தான் இங்கு நிலவுகிறது. கடந்த காலங்களில் இரண்டு முறை மலை உச்சியில் தீபம் ஏற்றுவதற்கு முயற்சி நடைபெற்றது. ஆனால், மதுரை கலெக்டர் அதை அனுமதிக்க மறுத்துள்ளார். தர்கா நிர்வாகம் மற்றும் வக்ப் வாரியம் உள்ளிட்ட எதிர்மனுதாரர்களுக்கு உரிய கால அவகாசம் வழங்கவில்லை. பதில்மனு தாக்கல் செய்ய சட்டப்படி கால அவகாசம் வழங்கப்படவில்லை.

வழக்கத்திற்கு மாறாக தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஒரு கட்டுமானத்தில் ஒரு உத்தரவு பிறப்பிக்கும் போது தொல்லியல் துறையின் விதிகளை பின்பற்ற வேண்டும். ஆனால் இந்த வழக்கில் அதை பின்பற்றவில்லை’’ என வாதிட்டார். தர்கா தரப்பிற்கு ஆதரவாக வழக்கறிஞர் வாஞ்சிநாதன் வாதிடுகையில், ‘‘கோயில் நிர்வாகம் தவிர வேறு யாரும் மதரீதியான நம்பிக்கைகளில் தலையிட முடியாது என தெளிவாக பல உத்தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது’’ என்றார். இதையடுத்து நீதிபதிகள், இன்றைக்குள் அனைத்து தரப்பு வாதங்களும் முடிக்க வேண்டும். புதிதாக இடையீட்டு மனுக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்படாது’’ எனக் கூறி வழக்கின் விசாரணையை இன்றைக்கு தள்ளி வைத்தனர்.

* வீடியோ கான்பரன்சில் இணைப்பை துண்டித்தார்: தனி நீதிபதி மீது வக்கீல் பரபரப்பு குற்றச்சாட்டு
வழக்கு விசாரணையின் போது தர்கா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மோகன் வாதிடும் போது, ‘‘திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் இதற்கு முன் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை கருத்தில் கொள்ளாமல் தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். தனி நீதிபதி எங்களை தாமாக முன்வந்து சேர்த்ததாக நோட்டீஸ் வழங்கப்பட்டது. எங்களது வாதங்களையும் கேட்கவில்லை. திங்கள்கிழமை விசாரித்து செவ்வாய்கிழமை பதிலளிக்க உத்தரவிட்டார். அடுத்த சில நாட்களில் தனி நீதிபதி உத்தரவே பிறப்பித்தார். இப்படி இருந்தால் எப்படி நாங்கள் வாதங்களை வைக்க முடியும்? தனி நீதிபதி தர்கா தரப்பிற்கு உரிய வாய்ப்பு அளிக்கவில்லை.

குறுகிய காலத்திற்குள் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார். அவரது விசாரணையின் போது எங்கள் கருத்துக்களை முழுமையாக கூறவோ, பதில்மனு தாக்கல் செய்யவோ அவகாசம் கொடுக்கவில்லை. எங்களுக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டதாகவே உள்ளது. இறுதி நாள் விசாரணையின் போது நான் வீடியோ கான்பரன்சில் வாதத்தை முன் வைத்தேன். ஆனால், எனது வீடியோ கான்பரன்ஸ் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதில் தனி நீதிபதி என்னை அசிங்கப்படுத்தி விட்டார். விதிமுறைகளை மீறி உள்ளார். எனது அனுபவத்தில் இதுபோன்று நடந்ததில்லை. எனது கோரிக்கை என்னவென்று கேட்கவில்லை’’ என கடுமையாக குற்றம் சாட்டினார்.

* ‘மனுதாரர் ஆதாரங்கள் சமர்ப்பிக்காதது ஏன்?’
அறநிலையத்துறை சார்பில் மூத்த வழக்கறிஞர் ஜோதி ஆஜராகி கூறியதாவது: உச்சிப்பிள்ளையார் கோயில் அருகில் இருப்பது தான் உண்மையான தீபத்தூண். திருப்பரங்குன்றத்தில் உள்ள ஒரே தீபத்தூண் நாயக்கர் கால தீபத்தூண். மற்றவை தீபத்தூண் இல்லை. ஆனால் தனி நீதிபதி அங்கு போய் பொது இடத்தில் தீபம் ஏற்றுங்கள் என்றால் எவ்வாறு ஏற்றுவது? வழக்கமாக தீபம் ஏற்றப்படும் தூண்களில் நாயக்கர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. மலை உச்சியில் உள்ள தூணில் எதுவும் இல்லை. பண்பாடாக, பாரம்பரியமாக நாயக்கர் காலத்தில் இருந்தே வழக்கமான இடத்தில் தீபமேற்றப்படுகிறது. தற்போது ஏற்றப்படும் தூணிற்கு இவ்வளவு ஆதாரங்கள் உள்ளது. மலை உச்சியில் உள்ள தீபத்தூணிற்கு தீபமேற்றியதற்கான ஆதாரங்கள் உள்ளதா? மனுதாரர் சமர்ப்பிக்காதது ஏன்?

* 1991ம் ஆண்டு வழிபாட்டு தலங்களுக்கான சிறப்புச் சட்டப்படி, 1947ல் ஒரு வழிபாட்டு தலம் எந்த நிலையில் இருந்ததோ அதை நிலையிலேயே பராமரிக்கப்பட வேண்டும். அதில் எவ்விதமான மாற்றங்களையும் செய்ய இயலாது. சன்னதிக்கு மேலே சுவாமிக்கு பின்பக்கம் எதிரே சரியாக கார்த்திகை தீபமேற்றப்படுகிறது. இது பாரம்பரிய நடைமுறையாக கோயில் ஆகம விதிப்படி நடக்கிறது. இதில் குறுக்கிடும் வகையில் குழப்பத்தை விளைவிக்கும் வகையில் மனுதாரர் மனு செய்துள்ளார். இதில் உத்தரவும் மனுதாரருக்கு சாதகமாக வழங்கப்பட்டுள்ளது. மத சுதந்திரம் என்பது சமூக ஒற்றுமையை குலைக்கும் வகையில் இருக்கக் கூடாது. தனி நீதிபதி ஏன் அவசரம் அவசரமாக இந்த வழக்குகளை கையாண்டார். 2 மணிக்கு முறையீடு 2.30 மணிக்கு விசாரணை. திடீர் உத்தரவு. இதனால் பல அதிகாரிகள் பாதிக்கப்பட்டார்கள். இவ்வாறு கூறினார்.

Tags : Icourt ,Supreme Court ,MADURAI ,ICOURD BRANCH ARGUED ,Thirupparangunaram hill ,G. R. ,Swaminathan ,
× RELATED ஓஎன்ஜிசி எண்ணெய் கிணறு குழாயில் காஸ் கசிவு: கிராம மக்கள் பீதி