×

இந்தியாவின் முதல் பிரதமராக நேரு எப்படி தேர்வு செய்யப்பட்டார்?.. மகாத்மா காந்தி பேரன் பரபரப்பு வீடியோ

புதுடெல்லி: இந்தியா சுதந்திரம் பெற்ற போது நேரு எப்படி முதல் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார், அப்போது நடந்தது என்ன என்பது குறித்து மகாத்மா காந்தி பேரன் ராஜ்மோகன் காந்தி பரபரப்பு வீடியோ வெளியிட்டுள்ளார். இந்தியாவின் முதல் பிரதமர் நேரு வாக்கு திருட்டு மூலம் தேர்வு செய்யப்பட்டார் என்று மக்களவையில் தேர்தல் சீர்திருத்த மசோதா மீதான விவாதத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டினார். இது பொய் என்று வரலாற்று ஆய்வாளர் பியூஷ் பபேலே வெளியிட்ட வீடியோவை காங்கிரஸ் வெளியிட்டு இருந்தது. நேற்று மகாத்மா காந்தியின் பேரன் ராஜ்மோகன் வெளியிட்ட வீடியோவை காங்கிரஸ் பகிர்ந்துள்ளது. ராஜ்மோகனின் தந்தைவழி தாத்தா மகாத்மா காந்தி, அவரது தாய்வழி தாத்தா, இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலும், தமிழ்நாட்டை சேர்ந்த முன்னாள் முதல்வர் சி. ராஜகோபாலாச்சாரி ஆவார்.

அவர் வெளியிட்ட 13 நிமிட வீடியோவில் கூறியிருப்பதாவது: 1940ல் ராம்கர் காங்கிரஸ் கூட்டத்தொடரிலிருந்து மவுலானா ஆசாத் காங்கிரஸ் தலைவராக இருந்தார். பலர் சிறைக்குச் சென்றதால், புதிய தலைவர் தேர்ந்தெடுப்பது குறித்து கேள்வி எழவில்லை, மேலும் காங்கிரஸ் கட்சியும் தடை செய்யப்பட்டது. எனவே மவுலானா ஆசாத் தலைவராகத் தொடர்ந்தார். வெள்ளையனே வெளியேறு இயக்கத்திற்காக சிறையில் அடைக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோர் 1945ல் விடுவிக்கப்பட்டனர். இதனால் 1946ல், காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்த கேள்வி எழுந்தது. அப்போது புதிய பிரதமர் யார் என்ற கேள்வி இல்லை. இந்தியா விரைவில் சுதந்திரம் அடையும் என்பது மக்களுக்குத் தெரியும். ஆனால் பிரிட்டிஷ் மற்றும் இந்தியர்களிடையே அப்போது எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.

ஒவ்வொரு மாநில காங்கிரஸ் கட்சியும், இந்த நபரை தலைவராக்க வேண்டும் என்று ஒரு பெயரை முன்வைப்பது வழக்கம். 3-4 பெயர்கள் வந்தால், இந்தப் பெயர்கள் அனைத்தும் மகாத்மா காந்திஜியின் முன் வைக்கப்படும். அவர் ‘இந்த நபருக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்’ என்று கூறுவார். அவரது முடிவு அப்படியே ஏற்றுக்கொள்ளப்படும். காந்தி தேர்ந்தெடுத்த நபர் காங்கிரசின் அடுத்த தலைவராக ஒவ்வொரு முறையும் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டார். இது ஒரு நல்ல முறை என்று நான் கூறவில்லை. ஆனால் அந்த நேரத்தில் இதுதான் பின்பற்றப்பட்டது. 1946 ஆம் ஆண்டில், காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி குறித்த கேள்வி எழுந்தபோது, ​​பல மாநில காங்கிரஸ் கட்சிகள் சர்தார் படேலின் பெயரை முன்மொழிந்து அவரை தலைவராக்க வேண்டும் என்று பரிந்துரைத்தன. மேலும் இரண்டு அல்லது மூன்று மாநில காங்கிரஸ் கட்சிகளும் ஆச்சார்யா கிருபளானியின் பெயரை முன்மொழிந்தன.

ஆனால் யாரும் நேருவின் பெயரை முன்மொழியவில்லை. இதுதொடர்பாக ஜபல்பூரைச் சேர்ந்த டி.பி. மிஸ்ரா தனது புத்தகத்தில் நாங்கள் படேலின் பெயரை முன்மொழிந்தபோது, ​​எங்களுக்கு பிரதமர் பதவி மனதில் இல்லை என்று தனது புத்தகத்தில் அப்ேபாதே எழுதியுள்ளார். 1931 ஆம் ஆண்டில் படேல் ஒரு முறை மட்டுமே தலைவராக இருந்தார். அதே நேரத்தில் நேரு 1929, 1936 மற்றும் 1937 ஆம் ஆண்டுகளில் தலைவர் பதவி வகித்தார். மேலும் படேல் நேருவை விட 14 வயது மூத்தவர். அவரது உடல்நிலையும் சரியில்லை, வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் அவர் பெரும் பங்கு வகித்தார். படேலை அகில இந்திய காங்கிரஸ் தலைவராக்கினால் அவருக்கு அளிக்கப்படும் மரியாதை என்று பலர் நினைத்தார்கள். ஆனால் அவரை பிரதமராக்குவது பற்றி எந்த யோசனையும் இல்லை.

காங்கிரஸ் செயற்குழு கூடுவதற்கு முன்பு படேல் மற்றும் கிருபளானியை தங்கள் பெயர்களை திரும்பப் பெற வேண்டும் என்று காந்தி சொன்னார். காந்தி உத்தரவை ஏற்று அவர்கள் உடனடியாக தங்கள் மனுக்களை வாபஸ் பெற்றனர். செயற்குழு கூடியபோது, ​​அவர்கள் (செயற்குழு உறுப்பினர்கள்) நேருவை காங்கிரஸ் தலைவராக நியமிக்க வேண்டும் என்று மட்டுமே முன்மொழிந்தனர். அதன்பின்னர் இந்திய சுதந்திரம் தொடர்பாக பிரிட்டிஷாருடன் ஒப்பந்தம் செய்யப்பட்டபோது, ​​நேரு காங்கிரஸ் தலைவராக இருந்தார். அவரே அரசாங்கத்தை அமைக்க அழைக்கப்பட்டார். காங்கிரஸ் தலைவர்கள் படேல் பிரதமராக வேண்டும் என்று விரும்பியிருந்தால், குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு செய்தித்தாள் நேரு பிரதமராக வருவதில் மகிழ்ச்சியடையவில்லை என்று செய்தி வெளியிட்டிருக்கும். படேல் பிரதமராக முடியாது என்பதில் நாங்கள் ஏமாற்றமடைந்துள்ளோம் என்ற தீர்மானம் இருந்திருக்கும்.

படேல் பிரதமராக வேண்டும் என்று பொது மக்கள் விரும்பியிருந்தால், அவர்களின் கருத்துக்கள் எங்காவது பிரதிபலித்திருக்கும். ஆனால் அந்த காலத்தில் அப்படி எதுவும் நடக்கவில்லை. நேரு பிரதமரானதில் மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். சர்தார் படேலும் அதை ஆதரித்தார். சர்தார் படேல் 1950 டிசம்பரில் இறந்தார். அதற்கு முன்பு அக்டோபரில், அவர் இந்தூரில் ஒரு உரையில் நேரு பிரதமரானது நாட்டிற்கு மிகவும் நல்லது என்றும், அவரை காங்கிரஸ் தலைவராகவும், அதன் பின்னர் நாட்டின் பிரதமராகவும் தேர்வு செய்த மகாத்மா காந்தியின் முடிவு சரியானது என்றும் பேசினார். இவ்வாறு ராஜ்மோகன் காந்தி கூறினார்.

Tags : Nehru ,Prime Minister of India ,Mahatma Gandhi ,New Delhi ,Rajmohan Gandhi ,India ,
× RELATED கொல்கத்தாவில் மெஸ்ஸி நிகழ்வில்...