×

பதவி நீக்க தீர்மான நோட்டீஸ் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தானே முன்வந்து பதவி விலகவேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை: நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யவேண்டுமென (இம்பீச்மெண்ட்) நாடாளுமன்ற மக்களவை தலைவரிடம் நூற்றுக்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் கையொப்பமிட்டு மனு ஒன்றை நேற்று அளித்துள்ளோம். இதனையடுத்து நாடாளுமன்ற நடைமுறைப்படி மக்களவை தலைவர், ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதி, ஒரு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, ஒரு சட்ட வல்லுநர் ஆகியோரை கொண்ட விசாரணைக் குழுவை உடனே அமைக்க வேண்டும். எனவே, மக்களவை தலைவர் விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான ‘இம்பீச்மெண்ட் நோட்டீஸில்’, அவர் ஒருதலைச் சார்போடும் அரசமைப்புச் சட்டத்துக்குப் புறம்பாகவும் நடந்துகொள்கிறார், ஒரு குறிப்பிட்ட வழக்கறிஞருக்கு ஆதரவாகச் செயல்படுகிறார், ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கு ஆதரவாக தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துகிறார் என்பவை உள்ளிட்ட குற்றச் சாட்டுகளைச் சுட்டிக் காட்டியுள்ளோம். எனவே, தற்போதைய சூழலில் அவருக்கு எந்த வழக்கையும் ஒதுக்கக்கூடாது என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியை கேட்டுக்கொள்கிறோம். அவருக்கு எதிராக ‘இம்பீச்மெண்ட் நோட்டீஸ்’ அளிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் தன்மீதான விசாரணை தடையின்றி நடப்பதற்கு ஏதுவாக, தானே முன்வந்து பதவி விலக வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : Judge ,G.R. Swaminathan ,Thirumavalavan ,Chennai ,Viduthalai Siruthaigal Party ,Speaker of the ,Lok Sabha ,
× RELATED தமிழ்நாட்டின் வளர்ச்சியை கருத்தில்...