சேலம்: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊரான சேலத்தில் தனது ஆலோசனைப்படி விஜய் பங்கேற்கும் கூட்டத்தை நடத்தி மேலும் அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க, செங்கோட்டையன் முடிவு செய்துள்ளார். தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை ஆரம்பித்த நடிகர் விஜய், போகும் இடங்களில் எல்லாம் நமக்கும், ஆளுங்கட்சிக்கும் இடையே தான் போட்டி என்று தொடர்ந்து பேசி சலிப்பூட்டி வருகிறார். சமீபத்தில் ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கூட, களத்தில் இல்லாதவர்களை பற்றி நான் பேச மாட்டேன் என்று அனைத்து கட்சிகளையும் கிண்டல் அடித்தார். இது தமிழ்நாட்டின் அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சியான அதிமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. விக்கிரவாண்டி தொடங்கி விஜயமங்கலம் வரை, அதிமுக தனக்கு ஒரு பொருட்டே இல்லை என்ற நிலையில் தான் அவர் பேசி வருகிறார்.
இதற்கிடையில், எடப்பாடி பழனிசாமியால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், தனது ஆதரவாளர்களுடன் விஜய் முன்னிலையில் அவரது கட்சியில் இணைந்தார். தன்னை கட்சியில் இருந்து நீக்கிய எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே, செங்கோட்டையன் தவெகவில் இணைந்துள்ளார் என்று அவரது ஆதரவாளர்கள் வெளிப்படையாகவே ேபசினர். இதை உறுதிப்படுத்தும் வகையில் விஜய்யை எம்ஜிஆருடன் ஒப்பிட்டு பேசி வெறுப்பூட்டினார் செங்கோட்டையன். அதோடு நிற்காமல் விஜயமங்கலத்தில் நடந்த கூட்டத்தில் எம்ஜிஆரை இமிடேட் செய்வது போல் ‘புரட்சி தளபதி’ என்று விஜய்யை புகழ்ந்து தள்ளினார் செங்கோட்டையன்.
அதேபோல் கூட்டத்தில் பேசிய விஜய், ‘அண்ணாவுக்கும் எம்ஜிஆருக்கும் யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. அவர்களும் எங்களது கொள்கை தலைவர்கள் தான் என்று கூறினார். இதுவும் ெசங்கோட்டையன் கொடுத்த ஐடியா தான். இந்த பேச்சு அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமியை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊரான சேலத்தில் விஜய் பங்கேற்கும் கூட்டத்தை வரும் 30ம் தேதி நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதிலும் செங்கோட்டையன், ஆலோசனை என்ற பெயரில் தலையிட்டு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க தயாராகி வருகிறார்.
இதுகுறித்து தவெக நிர்வாகிகள் கூறியதாவது: கரூரில் 41 உயிர்கள் பலியான சம்பவத்திற்கு பிறகு, தமிழகத்தில் இப்போதைக்கு கூட்டங்கள் வேண்டாம் என்ற முடிவில் தான் விஜய் இருந்தார். ஆனால் செங்ேகாட்டையன் தவெகவில் இணைந்து சில ஆலோசனைகளை வழங்கினார். அதன்பிறகே மீண்டும் தமிழகத்தில் செங்கோட்டையனின் சொந்த மாவட்டமான ஈரோட்டில் கூட்டம் நடத்தி பங்கேற்க முடிவு செய்தார் விஜய். அதன்படி கூட்டம் நடந்து முடிந்துள்ளது.
இதையடுத்து எந்த ஊரில் கூட்டம் நடந்தாலும் செங்கோட்டையனிடம் உரிய ஆலோசனை பெறவேண்டும் என்று வாய்மொழி உத்தரவு போடப்பட்டுள்ளது. இதன்படி சேலம் மாவட்ட தவெக கட்சியினரும் பணிகளை செய்து வருகின்றனர். அதேநேரத்தில் தவெகவில் செங்கோட்டையன் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் எடப்பாடி பழனிசாமியை கடுப்பில் ஆழ்த்த வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். இதனால் சேலத்தில் விஜய் பங்கேற்கும் கூட்டத்தில் தனது பவரை காட்ட பல்வேறு திட்டங்களை வைத்துள்ளார்.
வேறு எங்கும் எடப்பாடி பழனிசாமி குறித்து விமர்சிக்காத விஜய், சேலத்தில் பாஜ கூட்டணி எதிர்ப்பு என்ற பெயரில் அவர் மீது சீறிப்பாய்வதற்கு வாய்ப்புகள் உள்ளது. இதற்காக எடப்பாடி பழனிசாமி குறித்த சில அதிர்ச்சியூட்டும் தகவல்களை விஜய்யின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். இது அதிமுகவினரிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தும். அதேபோல் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருந்த முன்னாள் எம்எல்ஏக்கள், முக்கிய பிரமுகர்கள் சிலரை விஜய் முன்னிலையில் தவெகவில் இணைய செய்வதற்கான முயற்சிகளும் நடந்து வருகிறது.
ஈரோடு கூட்டத்தில் இது நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊரில் தான், இதை செயல்படுத்த வேண்டும் என்று முடிவு செய்துள்ளார் ெசங்கோட்டையன். மொத்தத்தில் எடப்பாடி பழனிசாமியை நேரடியாக அட்டாக் செய்ய முடியாத செங்கோட்டையன், எங்கள் கட்சியில் சேர்ந்து அவருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும் வேலையை நூறு சதவீதம் சரியாக செய்து வருகிறார். இவ்வாறு நிர்வாகிகள் கூறினர்.
