×

ரோஹிங்கியா அகதிகள் விவகாரம்; சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதியின் கேள்வியை திரித்து கூறலாமா?: 44 முன்னாள் நீதிபதிகள் கூட்டாக அறிக்கை

புதுடெல்லி: ரோஹிங்கியா அகதிகள் விவகாரத்தில் விமர்சனத்திற்கு உள்ளான தலைமை நீதிபதிக்கு ஆதரவாக, 44 முன்னாள் நீதிபதிகள் ஒன்றிணைந்து கூட்டாகக் குரல் கொடுத்துள்ளனர். உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2ம் தேதி ரோஹிங்கியா அகதிகள் தொடர்பான வழக்கு விசாரணையின்போது, ‘இவர்களுக்கு அகதிகள் என்ற அந்தஸ்தை ஒன்றிய அரசு அதிகாரப்பூர்வமாக வழங்கியுள்ளதா? எல்லை தாண்டி சட்டவிரோதமாக குடியேறியவர்கள் இந்தியச் சட்டத்தின் கீழ் முழுமையான பாதுகாப்பை கோர முடியுமா?’ என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் கேள்வி எழுப்பியிருந்தார்.

அவரது இந்தக் கருத்துக்கள் மனிதாபிமானற்றவை என்று கூறி, சில முன்னாள் நீதிபதிகள் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் அடங்கிய குழுவினர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இது நீதித்துறை வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், தலைமை நீதிபதி மீதான விமர்சனங்களை மறுத்து உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் 44 ஓய்வுபெற்ற நீதிபதிகள் நேற்று கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், ‘வழக்கு விசாரணையின்போது கேட்கப்பட்ட கேள்விகளைத் திரித்து, தலைமை நீதிபதிக்கு எதிராக உள்நோக்கத்துடன் கூடிய பிரசாரம் முன்னெடுக்கப்படுகிறது; இந்தியா அகதிகள் தொடர்பான 1951ம் ஆண்டு ஐ.நா. ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத நிலையில், சட்ட ரீதியான அடிப்படை கேள்விகளையே அவர் எழுப்பினார்’ என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும், ‘சட்டவிரோதமாக குடியேறியவர்கள் ஆதார், ரேஷன் கார்டு போன்ற ஆவணங்களைப் பெறுவது நாட்டின் அடையாள அமைப்பிற்கே அச்சுறுத்தலாகும்’ என்று சுட்டிக்காட்டியுள்ள அவர்கள், ‘இந்திய மண்ணில் இருக்கும் எவரும் சித்ரவதைக்கு ஆளாகக்கூடாது என்பதை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது’ என்றும் தங்கள் அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளனர்.

Tags : Supreme Court ,Chief Justice ,New Delhi ,
× RELATED வங்கி மோசடி வழக்குகளை விசாரிக்க தனி...