×

ஒன்றிய அமைச்சர் எல். முருகன் திருச்சி சிவா கடும் மோதல்

 

வந்தே மாதரம் பாடல் தொடர்பான விவாதத்தில் திமுக மாநிலங்களவை எம்பி திருச்சி சிவா ேபசும் போது, ‘ வந்தே மாதரம் குறித்த விவாதத்தை அரசு கொண்டு வந்தது. ஆனால், மாநிலங்களவையில் அரசுத் தரப்பில் முதல் வரிசையில் அமர்ந்திருப்போர் யாரும் தற்போது அவையில் இல்லை. அவையின் பா.ஜ தலைவர் ஜே.பி. நட்டா, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர், பிற தலைவர்களோ அவையில் இல்லை.

வந்தே மாதரம் குறித்து விவாதத்தைக் கொண்டு வந்தால் மட்டும் போதாது, விவாதத்தில் கலந்து கொள்ள வேண்டும். பால கங்காதர திலகர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், கஸ்தூரிபா காந்தி போன்றோர் நினைவாக நாட்டின் பல பகுதிகளில் சாலைகள், நினைவுச் சின்னங்கள், மருத்துவமனைகள் உள்ளன. ஆனால், வ.ஊ. சிதம்பரம் பிள்ளை, சுப்ரமணிய பாரதி, வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற தலைவர்களின் பெயர்கள் அவ்வாறு நினைவுகூரப்படுகிறதா? இந்த தலைவர்களில் பலரது பெயர்களை பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டார்.

ஆனால், இவர்கள் நினைவுகூரப்படுவதற்காக அரசு என்ன செய்தது?. வட இந்தியாவைச் சேர்ந்த பல சுதந்திரப் போராட்ட வீரர்கள் தமிழ்நாட்டில் பிரபலமாக இருக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றி நாட்டின் பிற பகுதிகளில் வாழும் மக்களுக்கு என்ன தெரியும்? குறைந்தபட்சம் பள்ளிப் பாடத்திட்டத்திலாவது இவர்கள் குறித்து கற்பிக்க வேண்டும். அப்போதுதான், பத்மாசனி அம்மாள், செண்பகராமன் பிள்ளை உள்ளிட்டோரின் தியாகம் வெளிச்சத்துக்கு வரும். செண்பகராமன் பிள்ளையின் பெயரை ஒரு போர் கப்பலுக்கு வைக்க வேண்டும்.

சுதந்திரப் போராட்டத்தில் தமிழர்களின் பங்களிப்பு வேறு எவரையும்விட குறைந்தது அல்ல. ஆனால், அவர்களின் பங்களிப்பு மறக்கப்பட்டுவிட்டது. மக்கள் அறியாத இத்தகைய கதாநாயகர்கள் மீது வெளிச்சத்தைப் பாய்ச்ச வேண்டியது அரசின் கடமை. தென் இந்தியாவைச் சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர்களையும் மதிக்க வேண்டும்’ என்று பேசினார்
அவரது பேச்சின்போது ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் குறுக்கிட்டார். இதனால், இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இருவரையும் சமாதானப்படுத்திய மாநிலங்களவைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், அவர்கள் இருவரது மோதலையும் அவைக்குறிப்பில் இருந்து நீக்கினார்.

Tags : Union Minister ,L. Murugan ,Trichy Siva ,DMK Rajya Sabha ,Vande ,Rajya Sabha ,
× RELATED யுஜிசி, ஏஐசிடிஇ, என்சிடிஇ ஆகியவற்றை...