×

அடிப்படை உரிமைகளை நிலைநாட்டிட மனித உரிமைகள் நாளில் உறுதி ஏற்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

சென்னை: அரசியல் சட்டம் வழங்கியுள்ள அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை நிலைநாட்டிட, சுயமரியாதையைப் பாதுகாத்திட இந்த மனித உரிமைகள் நாளில் நாம் அனைவரும் உறுதி ஏற்போம். என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 10ம் தேதி சர்வதேச மனித உரிமைகள் நாள் கொண்டாடப்படுகிறது. சாதி, மதம், இனம், நிறம், பாலினம், வயது அல்லது சமூகப் பின்னணியைப் பொருட்படுத்தாமல், நம் ஒவ்வொருவருக்கும் சொந்தமான உலகளாவிய உரிமைகளைப் பற்றி சிந்திக்க வேண்டிய தருணம் இது. 1948ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை, மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தை ஏற்றுக்கொண்டது. இந்தியாவிலேயே, தமிழ்நாட்டில் தான் தலைவர் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது, 1997ம் ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் தோற்றுவிக்கப்பட்டது.

1997 ஏப்ரல் முதல், 2025 செப்டம்பர் வரை இவ்வாணையத்திற்கு 2,84,687 புகார்கள் வரப்பெற்று, அவற்றில் 2,52,573 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டிற்கான மனித உரிமைகள் நாள் கருப்பொருளாக ஐக்கிய நாடுகள் சபையானது “மனித உரிமைகள், நமது அன்றாட அத்தியாவசியங்கள்” என்பதை அறிவித்துள்ளது. எல்லோர்க்கும் எல்லாம் என்ற அடிப்படையில், அனைத்துத் தரப்பினருக்குமான உன்னதமான திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்தி வரும் நமது திராவிட மாடல் அரசு, மதம், இனம், மொழி, நிறம், அரசியல் பாகுபாடின்றி அனைத்து உரிமைகளும் அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்திடுவதில் அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட்டு வருகிறது.
அந்த வகையில், அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை நிலைநாட்டிட, சுயமரியாதையைப் பாதுகாத்திட இந்த மனித உரிமைகள் நாளில் நாம் அனைவரும் உறுதி ஏற்போம். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags : Human Rights Day ,Chief Minister ,MK Stalin ,Chennai ,Tamil Nadu ,
× RELATED இலங்கைக்கு ஒன்றிய அரசு அழுத்தம் தரவேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்