×

திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற உத்தரவிட்ட இடத்தில் தீபம் ஏற்றியதற்கான எந்த விதமான ஆதாரங்களும் இல்லை: அரசு தரப்பு வாதம்

மதுரை: திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற உத்தரவிட்ட இடத்தில் தீபம் ஏற்றியதற்கான எந்த விதமான ஆதாரங்களும் இல்லை என அரசு தரப்பில் வாதம் வைக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் தீப வழக்கில் இன்று மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நடைபெற்று வருகிறது. அப்போது, அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் காணொளி காட்சி வாயிலாக ஆஜராகி பதில் அளித்தார். அதில், திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற உத்தரவிட்ட இடத்தில் தீபம் ஏற்றியதற்கான எந்த விதமான ஆதாரங்களும் இல்லை. முதலில் தீபத் தூண் என்பதை உறுதி செய்ய வேண்டும். ஆனால் அதற்கான ஆவணங்கள் இல்லை, எனவே அது தீபத் தூணே இல்லை. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள ஒரே கட்டிடம் தர்கா மட்டுமே என்று 1920-ல் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

1920-ல் திருப்பரங்குன்றத்தின் முழு மலையையும் ஆய்வு செய்து நீதிபதி தீர்ப்பு அளித்துள்ளார். ஆய்வின்போதே அங்கே தூண் இருந்திருந்தால் தனி நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டிருக்க வேண்டும். தர்கா அருகே உள்ள தூணில் தீபம் ஏற்ற முடியுமா என்பதுதான் எங்கள் கேள்வி. திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எந்த நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை என்பது ஏற்புடையதல்ல. தர்கா அருகே உள்ளது தீபம் ஏற்றும் தூணே அல்ல என்பதுதான் எங்கள் வாதம். தீபத்தூண் பிரச்சனை எழுவதற்கு முன்பே நெல்லை, மதுரை மாவட்டங்களில் உள்ள கல் தூண்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. நில அளவைத் துறை, வருவாய் துறை ஆய்வு செய்ததில் இது போன்றே பல்வேறு தூண்கள் தமிழ்நாட்டில் உள்ளன.

கல் தூண்களின் முக்கியத்துவத்தை சரிபார்க்கும் நோக்கத்துடன் நில அளவைத்துறை ஆய்வு செய்தது. நெல்லித்தோப்பு அருகே உள்ள படிக்கட்டுகள் காசி விஸ்வநாதர் கோயிலுக்குதான் செல்கிறது என்ற கூற்றை ஏற்க முடியாது. தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு, எவ்வித ஆவணங்களும் ஆதாரங்களும் இல்லாமல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் கோயில் நிர்வாகத்தின் முடிவில் தனி நீதிபதி எவ்வாறு தலையிட முடியும்? இந்த அதிகாரம் இணை ஆணையருக்குதான் உள்ளது. பூஜை விதிகள், அர்ச்சனை முறைகள், வழிபாட்டு உரிமை சட்டம் இப்படி அனைத்துமே தனிநீதிபதி உத்தரவு பொருந்தாது. இந்த வழக்கு தனி நீதிபதி விசாரணைக்கு உகந்தது அல்ல என மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் அரசு தரப்பு வாதம் வைக்கப்பட்டது.

 

Tags : Madurai ,Tiruparangundaram ,Thiruparangundaram Deepa ,
× RELATED 663 பேருக்கு வேலைவாய்ப்பு; முதல்வர்...