×

ஓ.என்.ஜி.சி சொத்துக்களை சேதப்படுத்திய பி.ஆர்.பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை: திருவாரூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு

 

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி காவேரி நகரில் வசிப்பவர் பி.ஆர். பாண்டியன் (58). தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளராக இருந்து வருகிறார். கடந்த 2015 ஜூலை மாதம் திருவாரூர் மாவட்டம் காரியமங்கலம் அருகே பெரியகுடி என்ற இடத்தில் பொதுத்துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் சார்பில் எண்ணெய் கிணறுகள் அமைப்பதற்காக முதல் கட்ட பணிகள் மேற்கொள்வதற்கு தொழிலாளர்களுக்காக கொட்டகைகள் அமைக்கும் பணி நடைபெற்றது.

இதனை கண்டித்து பி.ஆர்.பாண்டியன் மற்றும் அதே ஊரைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராஜ் (60) உள்பட 22 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கொட்டகை மற்றும் பொருட்களை சேதப்படுத்தியதுடன் பணியில் இருந்த தொழிலாளர்களிடம் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் ஒப்பந்ததாரரான மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயிலை சேர்ந்த வாஞ்சிநாதன் என்பவர் விக்கிரபாண்டியம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார், பி.ஆர்.பாண்டியன் மற்றும் செல்வராஜ் உள்ளிட்ட 22 பேர் மீது கொலை மிரட்டல், பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ்வழக்கு பதிவு செய்தனர்.

இது தொடர்பான வழக்கு திருவாரூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சரத்ராஜ், பி.ஆர்.பாண்யன் மற்றும் செல்வராஜ் ஆகிய இருவருக்கும் தலா 13 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.13 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். மேலும் வழக்கில் தொடர்புடைய 20 பேர்களில் 2 பேர் இறந்து விட்டதால், மீதமுள்ள 18 பேர்களையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். சிறைண்டனை விதிக்கப்பட்ட பி.ஆர். பாண்டியன் மற்றும் செல்வராஜ் இருவரையும் போலீசார் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

 

Tags : P.R. Pandian ,ONGC ,Tiruvarur Mahila Court ,Tiruvarur ,Mannargudi, Cauvery Nagar, Tiruvarur district ,Tamil Nadu Cauvery Farmers' Association ,
× RELATED மதுரை எல்ஐசி அலுவலகத்தில் தீ பெண் மேலாளர் உயிரிழப்பு