×

டிட்வா புயல் எதிரொலி; நெல்லையில் உளுந்து பயிரை அழிக்கும் விவசாயிகள்: சுமார் ரூ.15 லட்சம் இழப்பால் கண்ணீர்

நெல்லை: நெல்லை அருகே டிட்வா புயல் மற்றும் வடகிழக்கு பருவமழையின் தாக்கத்தால் சுமார் 100 ஏக்கர் உளுந்து பயிரின் வளர்ச்சி தடைபட்டதால், ஒரு ஏக்கருக்கு ரூ.15,000 வரை செலவழித்த நிலையில், சுமார் ரூ.15 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இதனால் உளுந்தை அழித்து உழுது நடவு பணிக்கு விவசாயிகள் கண்ணீருடன் தயாராகி வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை மற்றும் ‘டிட்வா’ புயலின் தாக்கமும் சேர்ந்து மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்தது. கடந்த மாதம் மட்டும் நெல்லை மாவட்டத்தில் 906.6 மி.மீ மழை கொட்டித் தீர்த்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் புள்ளிவிவரம் வெளியிட்டு உள்ளது. இதில், மானூர், கானார்பட்டி, பிள்ளையார் குளம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயிகள் உளுந்து பயிரிட்டிருந்தனர்.

இந்த பயிர்கள் தற்போது பூ பூத்து, காய்க்கும் பருவத்தில் இருந்தன. இந்நிலையில், தொடர் மழையால் உளுந்து வளர்ச்சி தடைபட்டது. கடும் குளிரால் உளுந்து பயிரில் காய் காய்க்கவில்லை. இதனால் விவசாயிகள் கவலையடைந்தனர். மேலும், காத்திருந்தால் நெல் நடவும் செய்யமுடியாமல் காலதாமதமாகிவிடக்கூடிய நிலை ஏற்படும் என்ற அச்சம் விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. இதனால், உளுந்து பயிருக்காக, ஏக்கருக்கு ரூ.15,000 வரை உரம், விதை என செலவு செய்திருந்த விவசாயிகள், தற்போது செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். முதலீடு செய்த பணம் முழுவதும் வீணானதால், விரக்தியின் உச்சத்திற்குச் சென்ற விவசாயிகள், சேதமான பயிர்களை டிராக்டர் மூலம் நிலத்தோடு உளுந்தை உழுது அழிக்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

மானூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஆபிரகாம், தனது நிலத்தில் அழிந்துபோன உளுந்து பயிர்களை கண்ணீருடன் உழுது அழித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்த ஆண்டு தொடர் மழையும், டிட்வா புயலால் ஏற்பட்ட கடும் குளிரும் உளுந்து பூக்கும் பருவத்தில் தாக்கியதால், பயிரின் வளர்ச்சி முற்றிலும் நின்றுவிட்டது. செய்த முதலீடு அனைத்தும் வீணாகிவிட்டது. வேறு வழியில்லாமல், அடுத்த பயிரையாவது பயிரிட வேண்டும் என்ற கட்டாயத்தில், நிலத்தோடு சேர்த்து உழுது அழிக்கிறோம். ஏக்கருக்கு ரூ.15,000 வீதம் 4 ஏக்கருக்கு ரூ.60,000 இழந்துள்ளேன்’’ என்றார். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கி, அவர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க நெல்லை மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் ஒட்டுமொத்தமாகக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Cyclone ,Fields ,Paddy Fields ,Cyclone Titva ,Northeast Monsoon ,
× RELATED பனப்பாக்கம் கிராமத்தில் புதர்கள் மண்டி வீணாகும் சிறுவர் பூங்கா