புதுடெல்லி: முன்பதிவு கவுண்டர்களில் வாங்கும் அனைத்து தட்கல் டிக்கெட்களுக்கும் ஒருமுறை கடவுச்சொல் (ஓடிபி) நடைமுறையை கட்டாயமாக்கும் நடைமுறையை ரயில்வே விரைவில் அமல்படுத்த உள்ளது.ரயில்களில் கடைசி நேர பயணத்திற்கான தட்கல் டிக்கெட்களில் முறைகேடுகள் நடப்பதை தடுக்க ரயில்வே நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. ஆன்லைனில் முன்பதிவு செய்யும் தட்கல் டிக்கெட்டுகள், உண்மையான பயணிகளுக்கு மட்டுமே கிடைப்பதை உறுதி செய்ய சமீபத்தில் ஆதார் கட்டாயமாக்கப்பட்டது.
தட்கல் முன்பதிவு தொடங்கிய முதல் 15 நிமிடங்கள் ஆதார் முன்பதிவு செய்த பயணிகள் மட்டுமே டிக்கெட் பெற முடியும் என்ற நடைமுறை கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் டிக்கெட் ஏஜென்ட்டுகள் முறைகேடாக தட்கல் டிக்கெட் பெறுவது தடுக்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில், முன்பதிவு கவுண்டர்களில் நேரடியாக சென்று தட்கல் டிக்கெட் பெறுவதிலும் தற்போது முக்கிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. முன்பதிவு கவுண்டர்களில் தட்கல் டிக்கெட் வாங்கும் போது, சம்மந்தப்பட்ட பயணியின் செல்போன் எண்ணுக்கு ஓடிபி (ஒன்டைம் பாஸ்வேர்டு) அனுப்பப்படும். அதை சரியான சொன்னால் மட்டுமே தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யப்படும். இந்த நடைமுறை சோதனை அடிப்படையில் கடந்த நவம்பர் 17ம் தேதி 12 ரயில்களுக்கு கொண்டு வரப்பட்டு பின்னர் 52 ரயில்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இது அடுத்த சில நாட்களில் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட இருப்பதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பொதுவாக, ஆன்லைனில் தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்ய முடியாதவர்கள், காலை 11 மணிக்கு முன்பதிவு கவுண்டர்கள் மூலம் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். இதற்காக அதிகாலை 3, 4 மணியில் இருந்தே வரிசையில் நிற்கத் தொடங்குவார்கள். இதிலும் வரிசையில் முதலில் நிற்கும் ஒரு சில பேருக்கு மட்டுமே தட்கல் டிக்கெட் கிடைக்கும். இவ்வாறு அதிகாலையில் இருந்து வரிசையில் நின்று தட்கல் டிக்கெட்டை பெற்று தர சிலர் கமிஷன் வாங்கிக் கொண்டு பகுதி நேர வேலையாக செய்து வருகின்றனர். இனி ஓடிபி கட்டாயம் மூலம் அடுத்தவர்களுக்காக கவுண்டர்களில் டிக்கெட் எடுப்பது கடினமாகும்.
