×

முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் முன்னாள் அதிமுக எம்எல்ஏ சின்னசாமி திமுகவில் இணைந்தார்

சென்னை: அதிமுக முன்னாள் எம்எல்ஏவும், முன்னாள் அண்ணா தொழிற்சங்க பேரவை முன்னாள் செயலாளருமான சின்னசாமி முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுக கட்சிக்குள் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு பல அணிகளாக செயல்பட்டு வருகிறது. பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்ற பின்பு நடைபெற்ற தேர்தல்களில் அதிமுக தொடர் தோல்விகளையே சந்தித்து வருகிறது. இதனால் அதிமுக முக்கிய நிர்வாகிகள் பலர் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக உடன் கூட்டணி வைத்திருந்த நிலையில் அந்த தேர்தலிலும் படுதோல்வியை சந்தித்தது. இதனால் பாஜகவை விட்டு வெளியேறிய அதிமுக, இனி ஒருபோதும் பாஜக உடன் கூட்டணி வைக்காது என எடப்பாடி பழனிச்சாமி வெளிப்படையாக அறிவித்தார். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக சட்டமன்ற தேர்தலுக்காக பாஜக உடன் அதிமுக மீண்டும் கூட்டணி அமைத்தது. பல்வேறு நிர்பந்தங்கள் காரணமாகவே பாஜக உடன் அதிமுக கூட்டணி அமைத்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன. அதிமுக மூத்த தலைவர்கள் பலர் பாஜக கூட்டணியை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் அதிமுக முக்கிய நிர்வாகிகள் பலர் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சிங்காநல்லூர் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏவான சின்னசாமி நேற்று திடீரென்று அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். இதற்காக நேற்று காலை அண்ணா அறிவாலயம் வந்த அவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அவருக்கு திமுக உறுப்பினர் அடையாள அட்டையை முதல்வர் வழங்கினார். இவர் அண்ணா தொழிற்சங்கக பேரவை செயலாளராக பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியின் போது, திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மேற்கு மண்டலப் பொறுப்பாளரும், கரூர் மாவட்டச் செயலாளருமான வி.செந்தில்பாலாஜி, செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், கோவை மாநகர் மாவட்டப் பொறுப்பாளர் துரை.செந்தமிழ்செல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : Principal ,Mu. K. ,Stalin ,MLA ,Sinnasamy Dimukh ,Chennai ,Anna Union Council ,Chinnasamy ,K. Stalin ,Chief Minister ,Jayalalitha ,Atamuka Party ,
× RELATED அமித்ஷா அவர்களே, நீங்கள் அல்ல.. உங்கள்...