சென்னை: சாலைகளின் நடுவிலும், ஓரங்களிலும் கொடிக்கம்பங்கள் நடுவது தொடர்பான வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மீறி கொடிக்கம்பங்கள் அமைத்த கட்சிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தமிழக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதி, சாலைகளின் நடுவில் தற்காலிக கொடிக்கம்பங்கள் அமைக்க கூடாது என்று உத்தரவு பிறப்பித்தும், சாலை நடுவில் 10 அடி உயரத்துக்கு கொடிகள் அமைக்கப்படுகின்றன. ஆனால் அரசியல் கட்சிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை.
இரண்டு நாட்களுக்கு முன்பு கொடிக்கம்பம் விழுந்து இரண்டு பேர் மரணமடைந்தனர். பொதுமக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் தற்காலிக கொடிக்கம்பங்கள் அமைக்கப்படுகின்றன. மக்களை பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. சமீபத்தில் சென்னை பசுமை வழிச்சாலையில் தற்காலிக கொடிக்கம்பங்கள் அமைக்கப்பட்டது. இதனால் பாதிக்கப்படுவது சாலைகளில் நடந்து செல்லும் ஏழை மக்கள்தான். காரில் செல்லும் மக்கள் அல்ல. கொடி கம்பங்களுக்கு முன்பணம் வசூலிக்க வேண்டும். முன்பணம் செலுத்தக் கூடிய நிலையில் தான் கட்சிகள் உள்ளன.
அரசியல் கட்சிகள் தற்காலிக கொடிக்கம்பங்கள் அமைப்பது குறித்து எந்த அதிகாரிகளும் கேள்வி கேட்பதில்லை. இது நீதிமன்ற அவமதிப்பு செயலாகும். அதனால் சாலை நடுவிலும், அருகிலும் எந்த அரசியல் கட்சியும் தற்காலிக கொடிக்கம்பங்கள் அமைக்கவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். மீறினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மட்டுமல்லாமல், அரசியல் கட்சிகளுக்கு எதிராகவும் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும். இது சம்பந்தமாக துறைகளுக்கும், மாவட்ட கலெக்டர்களுக்கும் தலைமை செயலாளர் அறிவுறுத்தல்களை பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை ஜனவரி 6ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
