×

வக்பு சட்டத்தை அமல்படுத்தும் விவகாரம்; மம்தா அரசுக்கு எதிராக அமைச்சர் போர்க்கொடி: மேற்குவங்கத்தில் பரபரப்பு

கொல்கத்தா: ஒன்றிய அரசின் வக்பு சட்டத்தை அமல்படுத்தும் மேற்கு வங்க அரசின் திடீர் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சொந்த அமைச்சரே போர்க்கொடி தூக்கியுள்ளார். நாடு முழுவதும் உள்ள வக்பு சொத்துக்களின் நிர்வாகத்தை மேம்படுத்தும் நோக்கில் ஒன்றிய அரசு வக்பு வாரிய சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது. இந்தச் சட்டத்தில் வக்பு வாரியத்தில் இஸ்லாமியர் அல்லாத உறுப்பினர்களைச் சேர்ப்பது, சொத்து தொடர்பான முடிவுகளில் அரசின் அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் இடம்பெற்றிருந்தன. இதற்கு ஆரம்பம் முதலே கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தனது மாநிலத்தில் இச்சட்டத்தை அமல்படுத்தப்போவதில்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.

மேலும் திரிணாமுல் காங்கிரஸ் அரசு சார்பில் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டு சட்டப் போராட்டம் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்பு கிடைக்காத சூழலில், மேற்கு வங்க அரசு தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளது. அதன்படி, வரும் 5ம் தேதிக்குள் மாநிலத்தில் உள்ள 82,000 வக்பு சொத்துக்களின் விவரங்களை ஒன்றிய அரசின் இணையதளத்தில் பதிவேற்றுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அரசின் இந்தத் திடீர் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மாநில அமைச்சரும், ஜமியத் உலமா-இ-ஹிந்த் அமைப்பின் தலைவருமான சித்திகுல்லா சவுத்ரி, ‘வக்பு சொத்துக்கள் பறிபோவதை அனுமதிக்க முடியாது; இது நீண்ட காலப் போராட்டம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ‘வக்பு சொத்துக்கள் விவகாரத்தில் இஸ்லாமியர்கள் அமைதியாக இருக்கமாட்டார்கள்’ என்று அவர் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். மேற்குவங்க முதல்வர் மம்தா அரசின் நிலைபாட்டிற்கு எதிராக மாநில அமைச்சரே கருத்து தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Mamta Government ,KOLKATA ,WEST BENGAL GOVERNMENT ,UNION ,VAKPU ,Union Government ,Wakpu ,
× RELATED பாஜக எம்எல்ஏக்கள் டெல்லி விரைய...