மீரட்: திருமணம் முடிந்த அன்று முதலிரவு ஏற்பாடு கண்டு பீதியடைந்த மணமகன் அன்று இரவு வீட்டை விட்டு ஓட்டம் பிடித்தார். அவரை 3 நாட்களுக்குப் பிறகு ஹரித்வாரில் வைத்து போலீசார் மீட்டனர். உத்தரபிரதேச மாநிலம் சாரதானா காவல் நிலைய பகுதிக்கு உட்பட்ட உஞ்சப்பூரை சேர்ந்தவர் மொஹ்சின் என்ற மோனு(26). இவருக்கு கடந்த நவ.27 அன்று திருமணம் நடந்தது.
அன்று இரவு அவருக்கு முதலிரவு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் மோனுவுக்கு முதலிரவு என்றதும் பீதி ஏற்பட்டது. மணப்பெண்ணை முதலிரவில் அசத்துவது எப்படி என்று தனது நண்பர்களிடம் ஆலோசனை கேட்டார். அவர்கள் வயாக்ரா போன்ற ஏதோ ஒரு நாட்டு மருந்தை கொடுத்தனர். அதை சாப்பிட்ட பிறகும் மோனுவுக்கு தன் மீது நம்பிக்கை ஏற்படவில்லை. இந்த பீதியில் அவர் முதலிரவுக்கு முன்பு வீட்டில் வைக்க விளக்கு வாங்கி வருவதாக கூறிவிட்டு வெளியே சென்ற அவர், யாருக்கும் தெரியாமல் ஓட்டம் பிடித்தார்.
முதலிரவு அறையில் காத்திருந்த மணப்பெண், கணவர் மோனு வராததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே உறவினர்கள் அனைவரும் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்த போது வீட்டை விட்டு ஓடிய மோனு, இரவு நேரத்தில் கங்கை நதி அருகே அலைந்து திரிவதைக் காட்டியது.
இதனால் அவர் முதலிரவுக்கு பயந்து நீரில் மூழ்கி இறந்து இருக்கலாம் என்று அச்சம் ஏற்பட்டது. ஆனாலும் சடலம் கிடைக்கவில்லை. தேடுதல் வேட்டை தொடர்ந்து. இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை ஹரித்வாரில் இருந்து அங்குள்ள ஒருவரின் செல்போன் மூலம் தனது தந்தையை தொடர்பு கொண்டு தான் பாதுகாப்பாக இருப்பதாக மோனு தெரிவித்தார். இதையடுத்து மீரட் போலீசார் அங்கு சென்று ஹரித்வார் ரயில்நிலைய பகுதியில் சுற்றித்திரிந்த மோனுவை மீட்டு கொண்டு வந்தனர்.
