புதுடெல்லி: ஜாமியா இஸ்லாமியா இஷாதுல் உலும் அறக்கட்டளையின் வெளிநாட்டு பங்களிப்பு நிதி ஒழுங்குமுறை சட்டமீறல்கள்(எப்சிஆர்ஏ) விசாரணையின் ஒரு பகுதியாக மகாராஷ்டிராவில் உள்ள 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை நேற்று சோதனை நடத்தியது. மகாராஷ்டிராவில் ஜாமியா இஸ்லாமியா இஷாதுல் உலும் அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. ஒன்றிய உள்துறை அமைச்சக உத்தரவின்படி வெளிநாட்டு பங்களிப்பு நிதி ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் பிற அரசு சாரா நிறுவனங்களுக்கு வழங்குவதில் இந்த அறக்கட்டளை சம்மந்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து,இந்த அறக்கட்டளையின் பதிவு சான்றிதழ் ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில், வெளிநாட்டு பங்களிப்பு நிதி ஒழுங்குமுறை சட்டமீறல்கள் வழக்கு தொடர்பாக மும்பை மற்றும் நந்தூர்பாரில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை நேற்று சோதனை நடத்தியது. இந்த வழக்கில் ஏமன் நாட்டு பிரஜையான அல் காதமி காலித் இப்ராகிம் சலேயின் நிறுவனம் மற்றும் பிற நிறுவனங்களிலும் சோதனை நடத்தப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
