×

மதுரவாயல் காவல் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

 

பூந்தமல்லி, டிச.1: மதுரவாயல் காவல் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டார்.சென்னையில் நேற்று முன்தினம் காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மர்ம நபர் மதுரவாயல் காவல் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் சிறிது நேரத்தில் அது வெடிக்கும் என கூறிவிட்டு செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார்.

இதுகுறித்து உடனடியாக மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சென்னை காவல் ஆணையரக அலுவலகத்திலிருந்து வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் உதவியுடன் மதுரவாயல் காவல் நிலையத்திற்கு விரைந்து வந்த போலீசார் காவல் வளாகம் முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டனர். சோதனையில் காவல் நிலையத்தில் வெடிகுண்டுகள் ஏதும் சிக்கவில்லை. அது வெறும் வெடிகுண்டு புரளி என தெரியவந்தது.

மேலும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது குறித்து செல்போன் நம்பரை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், மிரட்டல் விடுத்தவர், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பூபதி (43) என்பதும் இவர் மதுரவாயல் அடுத்த நொளம்பூரில் தங்கி அயனிங் வேலை செய்து வருகிறார். சமீபத்தில் இவர் சபரிமலைக்கு மாலை அணிந்து சென்று விட்டு திரும்பியுள்ளார். இந்த நிலையில், நேற்று இவர் மது அருந்தி உள்ளார். அப்போது, தலைக்கேறிய போதையில் தெரியாமல் காவல் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த மாதம் மதுரவாயல் கோயில் அருகே உள்ள பூங்காவில் வெடிகுண்டு வெடிக்கும் என்று மிரட்டல் விடுத்தவர், இவர் தான் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags : Maduravoyal police station ,Poonamalli ,Maduravoyal ,police station ,Chennai ,
× RELATED ஆவடி சத்தியமூர்த்தி நகர் அரசினர்...