சூலூர்: சூலூர் அருகே ஊருக்குள் புகுந்த சிறுத்தையை டிரோன் கேமரா மூலம் தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள மோட்டார் தயாரிக்கும் தொழிற்சாலைக்குள் கடந்த 12ம் தேதி சிறுத்தை ஒன்று புகுந்தது. இந்த காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சிறுத்தை எங்கே சென்றது? என தெரியாமல் பொதுமக்களும், வனத்துறையினரும் குழப்பத்தில் இருந்தனர். மேலும் சிறுத்தை வந்து சென்ற இடங்களில் கேமராக்களை வைத்து வனத்துறையினர் கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சாய் கார்டன் பகுதியில் சிறுத்தை உலா வந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் பொதுமக்கள் மேலும் பீதி அடைந்தனர். இதையடுத்து மதுக்கரை வனச்சரகத்தில் இருந்து வந்த 10க்கும் மேற்பட்ட வனத்துறையினர் நேற்றிரவு சிறுத்தை இருக்கும் இடத்தை கண்டறிய முயன்றனர். இதற்காக நேற்றிரவு டிரோன் கேமரா மூலம் சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு 11 மணி முதல் கேமரா மூலம் தேடியும் சிறுத்தையின் இருப்பிடம் தெரியவில்லை. தொடர்ந்து சிறுத்தையை தேடும் பணியில் வனத்துறையினர் விழிப்புடன் ஈடுபட்டு வருகின்றனர்.
