*8 பெண்கள் படுகாயம்
சாயல்குடி : சாயல்குடி அருகே களை எடுப்பதற்காக ஆள் ஏற்றிச் சென்ற லோடு வேன் கவிழ்ந்து 8 பெண் தொழிலாளிகள் படுகாயமடைந்தனர்.ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.
இதனால் நெல், மிளகாய் விவசாயம், பராமரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விவசாயிகள் பயிருக்கு களையெடுத்தல், உரமிடுதல் உள்ளிட்ட விவசாய பணிகளை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று காலையில் கடலாடி பகுதி விவசாய நிலங்களில் களை எடுக்கும் வேலைக்காக சாயல்குடி அருகே உள்ள மாரியூர் மற்றும் காந்திநகர் பகுதியை சேர்ந்த பெண் தொழிலாளர்களை மாரியூரை சேர்ந்த குப்புச்சாமி என்பவர், தனது லோடு வாகனத்தில் ஏற்றி வந்தார்.
அப்போது கிழக்கு கடற்கரை சாலை ஒப்பிலான் விலக்கு ரோட்டில் உள்ள போலீஸ் செக்போஸ்ட் அருகே வண்டி வந்த போது டிரைவரின் கட்டுப்பட்டை இழந்து இரும்பு சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்தது.இதில் பயணித்த பாப்பா, அருளானந்த மேரி, ஸ்டெல்லா, முனீஸ்வரி, கற்பகம், சண்முகவள்ளி, செல்வி, பெரிய பிராட்டி ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. இதில் டிரைவர் குப்புச் சாமிக்கு லேசான காயம் ஏற்பட்டது.
செக்போஸ்ட் பணியிலிருந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கடலாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கைகள், எலும்பு முறிவு, தலை காயம் ஏற்பட்டதால் மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்து குறித்து சாயல்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
