நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நவ.24ம் தேதி கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தேர்வு, டிச.5ம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை மற்றும் அதன் காரணமாக ஏற்பட்ட வெள்ளம் காரணமாக நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. மற்றும் அதன் இணைவு பெற்ற கல்லூரிகளில் கடந்த 24ம் தேதி நடத்தப்பட இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது.
மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டும், போக்குவரத்து மற்றும் பாதுகாப்புச் சவால்களைத் தவிர்க்கவும் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும், ஒத்திவைக்கப்பட்ட தேர்வுக்கான மாற்றுத் தேதி (Revised Date) விரைவில் பல்கலைக்கழகத்தின் தேர்வாணையம் அல்லது அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் பின்னர் அறிவிக்கப்படும் என்று பல்கலை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஒத்திவைக்கப்பட்ட தேர்வு, டிச.5ம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட அதே நேரம் மற்றும் அதே தேர்வு மையங்களில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாணவர்கள் இந்தத் தேர்வு அட்டவணை மாற்றத்தை உறுதிப்படுத்திக்கொள்ள பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் கல்லூரி அறிவிப்புப் பலகைகளைப் பார்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
