சென்னை: மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு ‘ஆண்டின் சிறந்த உலகளாவிய நிலையான நகர்ப்புற போக்குவரத்து திட்ட விருது வழங்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்ட மேம்பாட்டில், சுற்றுச்சூழலுக்கு உகந்த பல அம்சங்களை இணைத்து, நிலையான போக்குவரத்து வளர்ச்சியை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது. அறிவியல் முறைப்படி மாற்று மரக்கன்றுகள் நடுதல், காற்று மாசு குறைப்பு அமைப்புகள், தொடர்ச்சியான சத்தம் மற்றும் அதிர்வு கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடு, சுற்றுச்சூழலுக்கு உகந்த கட்டுமானப் பொருட்களைப் பயன்படுத்துதல் அடங்கும்.
இந்நிலையில் டெல்லியில் கடந்த 20ம் தேதி உலகளாவிய நிலையான வளர்ச்சி உச்சி மாநாடு நடந்தது. இதில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், உலகளவில் நிலையான நகர்ப்புறப் போக்குவரத்துக்கான 2025ம் ஆண்டின் சிறந்த திட்டத்திற்கான விருதை வென்றுள்ளது. இந்த உயரிய விருது, தி குளோபல் எனர்ஜி ஆண்டு என்விராய்மென் பவுண்டேசனால் ஏற்பாடு செய்யப்பட்ட உலகளாவிய நிலைத்தன்மை விருதுகள் 2025 நிகழ்வில் வழங்கப்பட்டது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் நடந்த விழாவில் இயக்குநர் சித்திக்கிடம் விருது வழங்கப்பட்டது.
இந்த அங்கீகாரம், சென்னை நகரத்திற்கு பசுமையான, பாதுகாப்பான மற்றும் நிலையான நகர்ப்புற போக்குவரத்து சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கான சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தொடர்ச்சியான நிலைத்தன்மை இலக்குகளுக்கான முயற்சிகளை அங்கீகரிக்கும் வகையில், 2024ம் ஆண்டில் உலகளாவிய நிலைத்தன்மை விருதை பெற்றுள்ளது என்பதும் சிறப்பித்துக் காட்டப்படுகிறது.
