×

விஐடி பல்கலையில் சர்வதேச சுற்றுச்சூழல் சட்டங்கள் கருத்தரங்கம்; அடுத்த நாட்டின் நிலப்பரப்பிற்கு தீங்கு விளைவிக்கும் உரிமை இல்லை: சர்வதேச நீதிமன்ற நீதிபதி பேச்சு

சென்னை: எந்தவொரு நாடும் தனது நிலப்பரப்பை மற்றொரு நாட்டின் நிலப்பரப்பிற்குத் தீங்கு விளைவிக்கும் வகையில் பயன்படுத்த உரிமை இல்லை என்று சர்வதேச நீதிமன்றத்தின் நீதிபதி லியோனார்டோ நெமர் கால்டீரா பிராண்ட் தெரிவித்தார். சென்னை வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் சர்வதேச சுற்றுச்சூழல் தொடர்பான சர்வதேச கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. வி.ஐ.டி. பல்கலைக்கழக துணை தலைவர் ஜி.வி.செல்வம் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக நெதர்லாந்து நாட்டில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தின் நீதிபதி லியோனார்டோ நெமர் கால்டீரா பிராண்ட் மற்றும் கவுரவ விருந்தினராக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ் குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த கருத்தரங்கில், சர்வதேச நீதிமன்ற நீதிபதி லியோனார்டோ நெமர் கால்டீரா பிராண்ட் பேசியதாவது: ஒவ்வொரு நாடும் காலநிலை அமைப்புக்கு ஏற்படும் பாதிப்பைத் தடுக்க உரிய கவனத்துடன் செயல்பட வேண்டும். எந்தவொரு நாடும் தனது நிலப்பரப்பை மற்றொரு நாட்டின் நிலப்பரப்பிற்குத் தீங்கு விளைவிக்கும் வகையில் பயன்படுத்த உரிமை இல்லை என்றார்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் பேசுகையில், `மாணவர்களும் இளம் வழக்கறிஞர்களும் உலகளாவிய கண்ணோட்டத்துடன் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான பங்களிப்பை வழங்க முயற்சிக்க வேண்டும்.’ என்றார்.

விஐடி துணை தலைவர் ஜி.வி.செல்வம் பேசும்போது, `சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதும் சட்டத்தை நிலைநிறுத்துவதும் எதிர்கால உலகைப் பாதுகாப்பதற்கு மிகவும் இன்றியமையாதது. தரவுகள் அடிப்படையிலான நடவடிக்கைகள் மற்றும் முயற்சிகளும், சர்வதேசச் சட்டமும், சுற்றுச்சூழல் சேதங்களைத் தடுக்க பயன்பட்டு வருகின்றன. சுற்றுச்சூழலை பாதுகாப்பது அனைத்து சட்ட வல்லுநர்களின் கடமையாகும்.’ என்றார்.
லியோனார்டோ நெமர் கால்டீரா பிராண்ட் விஐடி சென்னையின் சட்டத்துறை மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

Tags : International Environmental Laws ,VIT University ,International Court of Justice ,Chennai ,Judge ,Leonardo Nemar Caldeira Brandt ,Seminar… ,
× RELATED பயிர் விளைச்சல் போட்டிகளில் வெற்றி...