- செங்கோட்டியன் விஜய்
- எம்.ஜி.ஆர்
- கவிஞர் காசி முத்துமணிக்கம்
- தில்லி
- பனையூர்
- சென்னை
- திமுகா
- கவிஞர் காசிமுத்து மணிக்கம்
- செங்கோட்டையன்
- விஜய்
- டெல்லிக்கு பலமுறை காவடி எடுத்தவர் அன்றே பனையூரில் ‘சரண்டர்’ ஆகியிருக்கலாமே?
சென்னை: எம்ஜிஆரால் அரசியலில் வளர்த்தெடுக்கப்பட்ட செங்கோட்டையன் நடிகர் விஜய் காலில் விழுவதா என்று திமுக வர்த்தகர் அணி செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம் கடுமையாக சாடியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
எம்.ஜி.ஆரால் வளர்க்கப்பட்ட செங்கோட்டையன் நடிகர் விஜய் காலில் விழுவதா? கார் டூ கார் மாற்றுவது எடப்பாடி குணம், திரை நடிகர்களாக தேடுவது செங்கோட்டையன் குணமா? செங்கோட்டையன் செல்வதால் ஆட்சியை பிடிக்கலாம் என விஜய் கட்சியினர் கனவு காண வேண்டாம். நடிகர்கள் ஆரம்பித்த உடன் மூத்த தலைவர்கள் ஓடினால் ஓடுபவர் தான் அசிங்கப்படுவார்களே தவிர அந்த கட்சி வெற்றி பெறாது.
நடிகர் பாக்யராஜ் ஒரு கட்சி ஆரம்பித்தார், அந்த கட்சிக்கு கே.பி.ராமலிங்கம், போன்றோர் சென்றதால் பாக்யராஜ் ஆட்சி பிடித்தாரா? பல ஆண்டு காலம் ஏழைகளுக்காக வாழ்ந்த விஜயகாந்த், கட்சி ஆரம்பித்த உடன் பண்ருட்டியார், கு.ப.கிருஷ்ணன், பொன்னுசாமி, தி.நகர் ஜெயகுமார் சென்றனரே என்ன ஆயிற்று? விஜயகாந்த் ஆட்சியை பிடித்தாரா? நடிகர் சிவாஜி கணேசன் கட்சி ஆரம்பித்தாரே, சிவாஜிகணேசன் ஆட்சியை பிடித்தாரா?
ஜெயலலிதா இறந்ததற்கு பிறகு சசிகலா கூறித்தானே மீண்டும் அமைச்சரானீர்கள். அந்த சசிகலாவிடமாவது விசுவாசமாக சரணடைந்து இருக்க வேண்டாமா? எடப்பாடியை பிடிக்காவிட்டால் திமுகவிற்கோ அல்லது திராவிடர் கழகத்திற்காவது சென்று இருக்கலாம்.
செங்கோட்டையன் பெரிய அறிவாளி அல்ல, எந்த பிரச்சனையிலும் இவரின் தெளிவான பேச்சோ, கட்டுரையோ, அறிக்கையோ இதுவரை வந்தது இல்லை. வரும் டிசம்பர் பொதுக்குழுவில் செங்கோட்டையன் நீக்கப்படும் சூழலில், செங்கோட்டையன் த.வெ.க. செல்லவேண்டிய கட்டாயம். எதற்காக டெல்லி சென்று அமித்ஷா, நிர்மலா என சுற்றிவிட்டு இப்போது விஜய் காலில் விழுவது ஏன்? நேரடியாக பனையூருக்கே சென்று இருக்கலாமே. பாஜ தான் என்னை விஜய் கட்சிக்கு போகச்சொன்னது என்றாவது சொல்லுங்கள்.
இசிஆர் சென்று கொட்டிவாக்கம், நீலாங்கரை சென்று பனையூர் செல்வது தெரியும். ஆனால் பனையூருக்கு வழி டெல்லிதான் என்பதை செங்கோட்டையன் அறிவித்து இருக்கிறார். செங்கோட்டையன் அவசரப்பட்டுவிட்டார். பொறுமையாக இருந்திருந்தால் 2026 தேர்தலுக்கு பின் அதிமுக 2ம் கட்ட தலைவர்களால் எடப்பாடி தூக்கி வீசப்பட்டபின், மூத்த தலைவர் என்ற முறையிலும், எடப்பாடியின் கவுண்டர் சமூகத்தை சேர்ந்தவர் என்ற வகையிலும், அதிமுகவின் தலைமை பொறுப்புக்கு, பொதுச்செயலாளர் பதவிக்கு வந்திருப்பார்.
குழப்பமடைந்திருக்கும் தனி ஆளாக தத்தளித்துக் கொண்டிருக்கும் செங்கோட்டையனை விஜய்தான் வலிய சென்று பார்த்து, கூப்பிட்டு இருக்க வேண்டும். செங்கோட்டையன் சேருவதற்கு முன்பே விஜயை வீடு தேடி சென்று பார்ப்பது கேவலமாக இருக்கிறது. அதைப்போல் அதிமுக என்ற கட்சியிலிருந்து விலக்கி வைக்கும் அளவு சூழலை செங்கோட்டையன் தந்தது முதல் அசிங்கம், நீக்கினாலும் நான் அதிமுகதான் என்று பிடித்து அங்கே இல்லாமல், பாஜவுக்காக டெல்லி சென்று அலைந்தது மறு அசிங்கம், இன்று தவெக செல்வது 3வது அசிங்கம். என்னதான் செங்கோட்டையன் குட்டி கரணம் அடித்தாலும் பாஜவின் அடிவருடியான தவெகவிற்கு அ.தி.மு.க. தொண்டன் போகமாட்டான். விஜயகாந்த் 2016ல் தி.மு.க. கூட்டணியை விட்டு வெளியேறும் தவறான முடிவை எடுத்தார். செங்கோட்டையன் த.வெ.க.வுக்கு செல்லும் தவறான முடிவை எடுக்கமாட்டார் என நம்புகிறோம். மீறி முடிவு எடுத்தால் இந்த தேர்தலோடு அவர் செல்லா காசாகும் காலத்தை கண்ணால் பார்ப்போம். இவ்வாறு கூறியுள்ளார்.
