- ராமேஸ்வரம்
- கர்மேகம்
- ஜலினிகுளம்
- சிக்கல்
- ராமநாதபுரம் மாவட்டம்
- ராமநாதபுரம் அரசு பொதுப்பணித் துறை விருந்தினர் மாளிகை
ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம், சிக்கல் அருகே சிறைக்குளம் பகுதியை சேர்ந்தவர் கார்மேகம் (64). மனைவி 10 வருடத்துக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். கார்மேகம் ராமநாதபுரம் அரசு பொதுப்பணித்துறை விருந்தினர் மாளிகையில் உதவியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது, ராமேஸ்வரத்தில் உள்ள அரசு பொதுப்பணித்துறை விருந்தினர் மாளிகையில் தற்காலிக உதவியாளராக பணியாற்றி வருகிறார்.
கார்மேகம் ராமநாதபுரத்தில் பணியாற்றியபோது, பரமக்குடியை சேர்ந்த கஸ்தூரி (49) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. கார்மேகம் ஓய்வு பெற்ற பிறகு கிடைத்த முழுத்தொகையையும் கஸ்தூரியிடம் கொடுத்துவிட்டு, ‘‘மனைவி இல்லாமல் வாழும் எனக்கு கடைசி வரை நீதான் துணையாக இருக்க வேண்டும்’’ என கூறியுள்ளார்.
இதையடுத்து, இருவரும் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். பணி நிமித்தமாக ராமேஸ்வரம் சென்ற கார்மேகம், அவ்வப்போது பரமக்குடிக்கு வந்து கஸ்தூரியை சந்தித்து செலவிற்கு பணம் கொடுத்து வந்தார். இந்நிலையில் கஸ்தூரிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் கார்மேகத்தின் செல்போன் அழைப்பை ஏற்காமல் புறக்கணித்து வந்தார். இதையறிந்த கார்மேகம், ‘‘என்னோடு மட்டும்தான் நீ வாழ வேண்டும், இல்லையென்றால் நான் கொடுத்த பணத்தை திருப்பிக் கொடு’’ என சண்டையிட்டுள்ளார். பின்னர், ‘‘நமது பிரச்னையை பேசி தீர்த்துக் கொள்ளலாம். ராமேஸ்வரம் கிளம்பி வா’’ என கஸ்தூரியை அழைத்தார்.
இதையடுத்து நேற்று காலை ராமேஸ்வரம் வந்த கஸ்தூரி, கார்மேகம் தங்கியிருந்த பொதுப்பணித்துறை விருந்தினர் மாளிகை பின்பகுதியில் உள்ள அறைக்கு சென்றார். அப்போது, இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த கார்மேகம், திடீரென அறையில் வைத்திருந்த கத்தியை எடுத்து கஸ்தூரியின் கழுத்தில் குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த கஸ்தூரி, துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து, கார்மேகம், ராமேஸ்வரம் நகர் காவல் நிலையத்திற்கு சென்று சம்பவத்தை கூறி சரணடைந்தார். போலீசார் அவரை கைது செய்தனர்.
