×

ஹவாலா பணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டு வழிப்பறி நாடகமாடிய 6 பேர் பிடிபட்டனர்

தண்டையார்பேட்டை: ஹவாலா பணத்தை கொள்ளையடிக்க திட்டம் தீட்டி வழிப்பறி நாடகமாடிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை வடக்கு கடற்கரை போலீசார் கடந்த சனிக்கிழமை இரவு வழக்கம்போல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் 5 பேர் நின்று கொண்டிருந்தனர். போலீசார் வருவதை பார்த்ததும் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயற்சித்தனர். போலீசார் அவர்களை விரட்டிச் சென்று மடக்கி பிடித்து விசாரித்தபோது, முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.

பின்னர் அவர்களிடம் சோதனை நடத்தியதில் முகிலன் என்பவரிடமிருந்து கத்தி ஒன்று கைப்பற்றபட்டது. மேலும் அவர்களிடமிருந்த 3 இருசக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து நடத்திய விசாரணையில், பர்மா பஜார் மற்றும் என்.எஸ்.சி போஸ் சாலையில் ஹவாலா தரகர்களிடம் பணத்தை கைமாற்றிவிடும் முகமது மொய்தீன் என்பவர் ஏற்பாட்டின்படி கொள்ளையில் ஈடுபட திட்டமிட்டு இருந்தது தெரிய வந்தது. பர்மா பஜாரில் பணியாற்றும் முகமது மொய்தீன் ஞாயிற்றுக்கிழமை கடை இருக்காது என்பதால், தனது முதலாளி வழக்கமாக சனிக்கிழமை இரவே ஹவாலா பணத்தை தன்னிடம் கொடுத்து அவரது வீட்டுக்கு எடுத்துச் செல்ல சொல்வார்.

ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் நீங்கள் என்னை கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்து சென்று விடுங்கள். கொள்ளையர்கள் தாக்கி பணத்தைப் பறித்துச்சென்று விட்டார்கள் என முதலாளியை நம்ப வைத்து விடுகிறேன். பிறகு நாம் அனைவரும் கொள்ளையடித்த பணத்தை பங்கு பிரித்துக் கொள்ளலாம் என ஐடியா கொடுத்துள்ளார். அதன்படி 5 பேரும் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை அருகே காத்திருந்துள்ளனர் என தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக முகிலன் (21), அஜய் (26), முருகேஷ் (29)அமீது (21), பாஸ்கர் (19) மற்றும் திட்டம் தீட்டிய முகமது மொய்தீன் (37) ஆகிய ஆறு பேரையும் வடக்கு கடற்கரை போலீசார் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 6பேரையும் புழல் சிறையில் அடைத்தனர்.

Tags : Thandaiyarpet ,Chennai North Beach ,
× RELATED ஊத்தங்கரை அருகே நள்ளிரவில் வீடு...