திருமலை: உண்டியல் காணிக்கை மோசடியில் என்னை சிக்க வைக்க அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர் என முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் கருணாகர் ரெட்டி தெரிவித்துள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோயில் பரக்காமணியில் உண்டியல் காணிக்கை எண்ணும்போது சுமார் ரூ.100 கோடி வரை மோசடி நடந்ததாக வழக்கு பதியப்பட்டது. இதுகுறித்த விசாரணைக்காக திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் கருணாகர் ரெட்டிக்கு, சிறப்பு விசாரணை அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க கோரி நோட்டீஸ் வழங்கி இருந்தனர்.
அதனடிப்படையில், நேற்று திருப்பதி பத்மாவதி விருந்தினர் மாளிகையில் சிறப்பு விசாரணை குழு அதிகாரிகள் முன்பு கருணாகர் ரெட்டி ஆஜரானார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது: எனக்கு இந்த வழக்கில், பூமிக்கும் நட்சத்திரங்களுக்கு உள்ள தூரம் போன்றது. அமைச்சர் நாரா லோகேஷ், தலைவர் பி.ஆர். நாயுடு, தெலுங்கு தேசம் கட்சி மூத்த தலைவர் வர்லா ராமையா, அறங்காவலர் குழு உறுப்பினர் பானு பிரகாஷ் ஆகிய தீய நால்வரும் இவ்வழக்கில் என்னை சிக்க வைக்க அழுத்தம் கொடுத்துள்ளனர்.
நான் சட்டத்தை மதிக்கக்கூடியவன். எஸ்.ஐ.டி. தலைவரும் கூடுதல் டி.ஜி.பி. ரவிசங்கர் அய்யனார் தலைமையில், பரக்காமணி மோசடியில் ஈடுபட்ட ரவிக்குமாரிடம் சொத்துகளை எவ்வாறு எழுதி பெறப்பட்டது, அவரது சொத்துகளில் வேறு யாருக்காவது பங்கு சென்றதா?, நீங்கள் தலைவராக வந்த பிறகு இது உங்கள் கவனத்தில் வந்ததா?, அப்படி வந்தால் மோசடி வழக்கில் லோக் அதாலத் மூலம் ஏன் தீர்வு காணப்பட்டது, நீங்கள் எதிர்ப்பு தெரிவித்தீர்களா? என கிடுக்கிப்பிடி கேள்விகளை விசாரணை அதிகாரிகள் கேட்டு தகவல்களை பெற்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
