வாஷிங்டன்: தைவான் விவகாரம் புதிய நெருக்கடியை ஏற்படுத்தி உள்ள நிலையில், அதிபர்கள் டிரம்ப்-ஜி ஜின்பிங் தொலைபேசியில் உரையாடினர். இதைத் தொடர்ந்து வரும் ஏப்ரலில் சீனா செல்வதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
அண்டை நாடான தைவான் தீவை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இதற்கு தைவான் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறது. இரு நாடுகளுக்கு இடையேயான இப்பிரச்னை பல ஆண்டாக நீடிக்கிறது. இதற்கிடையே, ‘தைவான் மீது சீனா ராணுவ நடவடிக்கை எடுத்தால் ஜப்பான் பதிலடி கொடுக்கும்’ என ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சி சமீபத்தில் கூறினார். இதன் மூலம் ஜப்பான் சிவப்பு கோட்டை தொட்டு விட்டதாக சீனா எச்சரித்தது. இதனால் இரு நாடுகள் இடையே கடும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில், ஜப்பானின் மிக நெருங்கிய நட்பு நாடான அமெரிக்காவின் அதிபர் டிரம்ப் நேற்று சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் தொலைபேசியில் உரையாடினார். இதுதொடர்பாக டிரம்ப் தனது ட்ரூட் சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், ‘‘உக்ரைன், பென்டானில் போதைப்பொருள் தடுப்பு, அமெரிக்க சோயாபீன்ஸ் கொள்முதல் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவாதித்தோம். சீனாவுடனான எங்கள் உறவு மிகவும் வலுவானது. வரும் ஏப்ரல் மாதம் சீனா வருமாறு அதிபர் ஜின்பிங் அழைத்தார். அதை ஏற்றுக் கொண்டுள்ளேன். அதே போல அடுத்த ஆண்டு இறுதியில் அமெரிக்காவுக்கு அரசு முறை பயணமாக வர ஜின்பிங் சம்மதித்துள்ளார்’’ என்றார். தொலைபேசி உரையாடலை உறுதிபடுத்திய சீனா, இப்பயணங்கள் பற்றி எதுவும் கூறவில்லை.
எச்-1பி விசா பற்றி டிரம்ப் பேச்சு தவறாக சித்தரிப்பு
சமீபத்தில் பேட்டி அளித்த அதிபர் டிரம்ப் அமெரிக்காவின் போதிய திறமையான இளைஞர்கள் இல்லை எனக் கூறி எச்-1பி விசாவுக்கு ஆதரவாக பேசினார். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், எச்-1பி விசா மூலம் அமெரிக்க தொழிலாளர்கள் வேலை பறிக்கப்படுவதை டிரம்ப் ஆதரிக்கிறாரா என்ற கேள்விக்கு நேற்று பதிலளித்த வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் கரோலின் லீவிட், ‘‘எச்-1பி விசா விவகாரத்தில் அதிபர் டிரம்பின் நிலைப்பாடு தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க தொழிலாளர்களின் வேலை பறிக்கப்படுவதை அவர் ஆதரிக்கவில்லை. அமெரிக்காவில் பல கோடி முதலீடு செய்யும் நிறுவனங்களில் ஆரம்பத்தில் சில சிக்கலான பணிகளை செய்ய நிபுணத்துவம் கொண்டவர்களை எச்-1பி விசா மூலம் அழைத்து வந்து அமெரிக்கர்களுக்கு கற்றுத் தர வேண்டும். அதன் பின் அமெரிக்க தொழிலாளர்களே இருக்க வேண்டும் என்பதே அதிபர் டிரம்பின் நிலைப்பாடு’’ என்றார்.
