×

2 பேருக்கு போலி பணி நியமன ஆணை செங்கல்பட்டு பெண் கைது குடியாத்தத்தில் ரூ.8 லட்சம் பெற்றுக் கொண்டு

குடியாத்தம், நவ. 26: குடியாத்தத்தில் ரூ.8 லட்சம் பெற்றுக்கொண்டு 2 பேருக்கு போலி பணி நியமன ஆணை வழங்கிய செங்கல்பட்டு பெண்ணை போலீசார் கைது செய்தனர். செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த சேகர் மனைவி சுமதி (43). இவர், 2012ம் ஆண்டு கருணை அடிப்படையில் வருவாய் துறையில் கிராம உதவியாளராக பணிக்கு சேர்ந்துள்ளார். இவர் கடந்த சில ஆண்டுகளாக அரசு வேலை வாங்கித் தருவதாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நபர்களிடம் பல லட்சம் ரூபாய் பெற்றுள்ளார். இதுகுறித்து பணம் கொடுத்து ஏமாந்த மக்கள் தொடர்ந்து கொடுத்த புகாரின் பேரில் சுமதியை வருவாய் துறை உயர் அதிகாரிகள் தற்காலிக பணி இடை நீக்கம் செய்தனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கல்லூர் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேஷ், சந்தோஷ் ஆகியோர் கடந்த 2017ம் ஆண்டு தனியார் செல்போன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். அப்போது சுமதியுடன் அவர்களுக்கு நட்பு ஏற்பட்டு உள்ளது. அதில் தான் அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதை நம்பி ஏமாந்த 2 பேரும் தலா ரூ.4 லட்சம் என மொத்தம் ரூ.8 லட்சத்தை சுமதியிடம் கொடுத்துள்ளனர். பணத்தை பெற்றுக் கொண்ட சுமதி 2 பேருக்கும் வருவாய்த் துறையில் பணி நியமன ஆணை மற்றும் அடையாள அட்டை ஆகியவை செல்போனில் அனுப்பி உள்ளார். பின்னர், தான் கூறும்போது தான் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வர வேண்டும் என தெரிவித்துள்ளார். இதில் சந்தேகம் அடைந்த குடியாத்தம் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ், சந்தோஷ் ஆகியோர் இதுகுறித்து உள்ளூர் அரசு அதிகாரிகளிடம் விசாரணை செய்தபோது இவை போலியான ஆணை என தெரியவந்துள்ளது.
இதுகுறித்து இருவரும் குடியாத்தம் டவுன் போலீசில் புகார் அளித்திருந்தனர். அதன்படி போலீசார் சுமதி மீது வழக்குப்பதிந்து நேற்று இரவு கைது செய்து வேலூர் மத்திய பெண்கள் சிறையில் அடைத்தனர்.

Tags : Chengalpattu ,Shekar ,Sumathi ,Karunai ,
× RELATED சிறுத்தையை விரட்டியடித்த பெண்...