×

சிறுத்தையை விரட்டியடித்த பெண் பேரணாம்பட்டு அருகே மக்கள் பீதி கன்று குட்டிகளை கடித்து குதறிய

பேரணாம்பட்டு, டிச.17: பேரணாம்பட்டு அருகே கன்று குட்டிகளை கடித்து குதறிய சிறுத்தையை பெண் விரட்டியடித்தார். இச்சம்பவம் அப்பகுதியினரிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த பத்தலபல்லி கிராமத்தை சேர்ந்த வரலட்சுமி என்ற பெண், நேற்று முன்தினம் பேரணாம்பட்டு- வி.கோட்டா செல்லும் சாலையில் உள்ள வருவாய் துறையினருக்கு சொந்தமான மலைப்பகுதியில் தனது மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார். அங்குள்ள ஒரு மரத்தடியில் வரலட்சுமி அமர்ந்திருந்த நிலையில், திடீரென மாடுகள் அலறும் சத்தம் கேட்டு, அங்கு சென்று பார்த்தார். அப்போது சிறுத்தை ஒன்று கன்று குட்டிகளை கடித்து குதறி கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக கத்தி கூச்சலிட்டபடி அங்கிருந்த கற்களை வீசி சிறுத்தையை விரட்ட முயற்சித்துள்ளார்.

அப்போது சிறுத்தை வரலட்சுமியையும் தாக்க முயன்றுள்ளது. ஆனால் வரலட்சுமி தைரியமாக தனது கையில் வைத்திருந்த கம்பால் தாக்குவதற்காக சிறுத்தையை நோக்கி ஓடி உள்ளார். இதனால் சிறுத்தை ஒரு கன்று குட்டியை கவ்விக்கொண்டு வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. இதையடுத்து காயமடைந்த 2 கன்றுகுட்டிகள் மற்றும் மாடுகளை வரலட்சுமி வீட்டிற்கு ஓட்டிச்சென்றார். முன்னதாக தகவலின்பேரில் பேரணாம்பட்டு வனவர் இளையராஜா மற்றும் வனத்துறையினர் வந்து காயமடைந்திருந்த 2 கன்று குட்டிகளை பார்வையிட்டு சிறுத்தைதான் கடித்து குதறி உள்ளது என்பதை உறுதி செய்துள்ளனர். இதையடுத்து வரலட்சுமியிடம் இங்கு மாடுகளை மேய்க்க வேண்டாம் என அறிவுறுத்தினர். இந்நிலையில் நேற்று சிறுத்தை கவ்வி சென்ற கன்றுகுட்டியை பாதியளவு சாப்பிட்டுவிட்டு வனப்பகுதியில் விட்டுச்சென்றிருப்பதை வனத்துறையினர் கண்டறிந்தனர். தொடர்ந்து சிறுத்தையின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். சிறுத்தை நடமாட்டம் இருப்பது அப்பகுதியினரிடையே பரபரப்பையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

Tags : Peranampattu ,Varalakshmi ,Pathalapalli ,Vellore district ,Peranampattu-V. ,
× RELATED காதல் மனைவி தற்கொலை வழக்கில்...