வேலூர், டிச.15: ஓய்வு பெறும் நிலையில் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படும் அரசு பணியாளர்களை உரிய நிபந்தனைகளுடன் ஓய்வு பெற அனுமதிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசுத்துறைகளில் அதிகாரிகள் நிலையில் தொடங்கி கீழ்நிலை அலுவலர்கள், பணியாளர்கள் வரை முறைகேடு உள்ளிட்ட பல்வேறு புகார்களின் கீழ் ஓய்வு பெறும் நிலையில் சிக்கினால் அவர்கள் ஓய்வு பெற அனுமதிக்கப்படாமல் சஸ்பெண்ட் செய்யப்படுகின்றனர். இதன் மூலம் அவர்கள் பணிநீட்டிப்பு என்ற நிலையை ஒழுங்கு நடவடிக்கைகள் முடியும் வரை அடைகின்றனர். இதுதொடர்பான அரசு விதிகள்(56)(1)(சி) தற்போது நீக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இனிமேல் எந்த அரசு ஊழியரையும், பணி ஓய்வு பெறும் தேதியில் ஓய்வு பெற அனுமதிக்காமல் பணியில் தொடர்ந்து நீட்டிக்க இயலாது. மேலும் அவர்கள் பணி ஓய்வு பெறும் தேதியில் பணி ஓய்வு பெற அனுமதிக்கப்பட வேண்டும்.
மேலும், ஏற்கனவே பணி ஓய்வு பெற அனுமதிக்கப்படாமல், பணி நீட்டிப்பில் உள்ள அரசு பணியாளர்களை வயது முதிர்வு காரணமாக பணியில் இருந்து ஓய்வு பெற அனுமதிக்கும் வகையில், அவர்களது தற்காலிக பணிநீக்கத்தை ரத்து செய்து, வயது முதிர்வு காரணமாக பணி ஓய்வு பெற உள்ள நாளில் ஓய்வு பெற அனுமதிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு பணியாளர்களின் அடிப்படை விதிகள் 56(1)(சி) மற்றும் தமிழ்நாடு ஓய்வூதிய விதிகள் 1978ல் திருத்தங்கள் செய்யப்பட்டு அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
அதன்படி, முறைகேடுகள், ஊழல் புகார்களின் அடிப்படையில் ஓய்வு பெறும் நிலையில் சஸ்பெண்ட் நடவடிக்கைகள் தவிர்க்கப்பட்டு சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்கள் ஓய்வு பெற அனுமதிக்கப்படும் அதேவேளையில், ஒழுங்கு நடவடிக்கைகள் தொடரும் என்றும் தமிழக அரசு அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்கக ஆணையரகம் வெளியிட்டுள்ள உத்தரவில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் வட்டார வளர்ச்சி அலுவலர் நிலையில் ஓய்வுபெற அனுமதிக்கப்படாமல், பணி நீட்டிப்பில் உள்ள அலுவலர்களை வயது முதிர்வின் காரணமாக பணியில் இருந்து ஓய்வு பெற அனுமதிக்கும் வகையில், நிலுவையில் உள்ள ஒழுங்கு நடவடிக்கைகள் தொடரும் என்ற நிபந்தனைகளுடன் ஓய்வுபெற அனுமதிக்க நியமன அலுவலரான மாவட்ட கலெக்டர் நிலையிலேயே தமிழ்நாடு ஓய்வூதிய விதிகள் 1978 விதி எண் 9ன் கீழ் பணி ஓய்வு ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.பிள்ளைபேறு பெற்றவர்கள் பலா மரத்தில் தொட்டில் கட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர்
