×

சிறுவாபுரி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம்: 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்

பெரியபாளையம், நவ.26:சிறுவாபுரி முருகன் கோயிலில், நேற்று செவ்வாய் கிழமை என்பதால், திரளான பக்தர்கள் கூட்டம் குவிந்தது. இதனால், சுமார் 2 மணி நேரம் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்து சென்றனர். திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே, சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சாமி கோயில் உள்ளது. இங்கு, தொடர்ச்சியாக, 6 வாரங்கள் வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. அதிலும், முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை நாட்களில் சிறுவாபுரி கோயிலில் பக்தர்கள் அதிகளவில் வந்து செல்வது வழக்கம்.
அதன்படி, செவ்வாய்க்கிழமையான நேற்று சிறுவாபுரி முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. திருவள்ளூர் மாவட்டம் மட்டுமல்லாது, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமானோர் இங்கு சாமி தரிசனம் செய்ய வந்தனர்.

பொது தரிசனம், 50 ரூபாய், 100 ரூபாய் கட்டண தரிசனம் என அனைத்து வரிசைகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கோயிலுக்கு வெளியே நீண்ட வரிசையில் வந்து காத்திருப்பு மண்டபம் வழியே கோயிலுக்குள் வந்து சுமார் 2 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மூலவர் பாலசுப்பிரமணியர் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். புதிய வீடு கட்ட வேண்டும், திருமண தடை நீங்க வேண்டும், அரசியல், ரியல் எஸ்டேட் தொழில் என பல்வேறு வேண்டுதல் நிறைவேறுவதற்காக ஆலயத்தின் பின்புறம் உள்ள வேப்பமரத்தடியில் நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தும், செங்கற்களை அடுக்கி வைத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கு குடிநீர், அன்னதானம் பிரசாதங்களை கோயில் செயல் அலுவலர் மாதவன் ஏற்பாடு செய்திருந்தார்.

Tags : Siruvapuri Murugan Temple ,Lord Shiva ,Periypalayam ,Siruvapuri ,Thiruvallur district… ,
× RELATED ஆவடி சத்தியமூர்த்தி நகர் அரசினர்...