நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் சாரல் மழை இன்றும் தொடர்கிறது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, கன்னியாகுமரி உட்பட தென் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்திலுள்ள முக்கிய அணைகளான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு ஆகியவற்றின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. அணைப் பகுதிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணைகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் முடுக்கிவிட்டுள்ளது.
மாவட்டத்தில் இன்று காலை வரை அதிகபட்சமாக பாலமோரில் 34.4 மி.மீ மழை பெய்திருந்தது. கொட்டாரம் 11.4, நாகர்கோவில் 10.6, ஆரல்வாய்மொழி 7, பூதப்பாண்டி 6.2, முக்கடல் 6.3, அடையாமடை 14.6, கோழிப்போர்விளை 6.8, மாம்பழத்துறையாறு 7, கோழிப்போர்விளை 6.8, சிற்றார்-1ல் 9.6, குழித்துறை 16.4, பேச்சிப்பாறை 8.6, பெருஞ்சாணி 11.4, புத்தன் அணை 12.2, சுருளோடு 13.2, திற்பரப்பு 11.8, முள்ளங்கினாவிளை 7.6 மி.மீட்டரும் மழை பெய்திருந்தது. மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழைக்கு மேலும் 2 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன.
இன்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 44.12 அடியாகும். அணைக்கு 1294 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. 240 கன அடி தண்ணீர் பாசனத்திற்கு திறந்துவிடப்பட்டிருந்தது. 1835 கன அடி தண்ணீர் உபரியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. பெருஞ்சாணி நீர்மட்டம் 68.8 அடியாகும். அணைக்கு 864 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது. 250 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. சிற்றார்-1ல் 11.51 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு 149 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. சிற்றார்-2ல் 11.61 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு 219 கன அடி தண்ணீர் வரத்து இருந்தது.
பொய்கையில் 29.5 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு 19 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. 30 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 45.11 அடியாகும். அணைக்கு 2 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. முக்கடல் அணையின் நீர்மட்டம் 22.6 அடியாகும். குமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான கடல் பகுதியில் 13 முதல் 17 வினாடிகளுக்கு ஒருமுறை 0.4 முதல் 0.5 மீட்டர் உயரத்திற்கு பேரலைகளுக்கு வாய்ப்பு உள்ளது. 26ம் தேதி வரை இந்தநிலை காணப்படும் என்பதால் கடலோர பகுதிகளில் வசிக்கின்றவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
