சீர்காழி, நவ.25: சீர்காழி அருகே மடத்துக்குப்பம் கடற்கரை பகுதியில் ஆயிரத்திற்கு மேற்பட்ட பனை விதைகள் நடவு செய்யப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே நாயக்கர் குப்பம் மற்றும் மடத்துக்குப்பம் கடற்கரை கிராமங்களில் பனை மரங்களை அழிவிலிருந்து காப்பாற்றும் வகையிலும், நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்கும் வகையிலும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும் பூம்புகார் பனை அறக்கட்டளை சார்பாக பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. பனை விதைகள் நடும் பணியை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக உதவி பேராசிரியர் மற்றும் பூம்புகார் பனை அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் ரவீந்திரன் தொடங்கி வைத்தார்.
அப்போது மழை பெய்த நிலையில் அதனை பொருட்படுத்தாது ஆர்வமுடன் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பனை விதைகள் நடவு செய்யப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் அறக்கட்டளை நிர்வாகிகள், பிரியா ரவீந்திரன், சிவசுப்பிரமணியன், ஆசிரியர் சேலாதன், இலக்கியா, ஊர் நாட்டார்கள், நடேசன், சுந்தரமூர்த்தி, மணிமாறன், மாயாண்டி மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். பூம்புகார் பனை அறக்கட்டளை சார்பாக கடந்த 7 ஆண்டுகளாக பல லட்சம் பண விதைகள் நடுவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
